புதுடெல்லி: இந்தியாவில் ரயில் பயணத்திற்கு இணையம்வழி முன்பதிவு செய்வது அதிகரித்து வருகிறது.
இப்போது, 88 விழுக்காட்டுப் பயணிகள் இணையம் வழியாக முன்பதிவு செய்கின்றனர். 2024ஆம் ஆண்டில் இவ்விகிதம் 81 விழுக்காடாக இருந்தது.
மாறாக, கட்டண முகப்புகளுக்கு நேரடியாகச் சென்று பணம் செலுத்தி பயணச்சீட்டு வாங்குவது 12 விழுக்காடாகக் குறைந்துவிட்டது. இது, 2024ஆம் ஆண்டில் 19 விழுக்காடாக இருந்தது.
ஐஆர்சிடிசி தளம் மூலமாக இணையவழி பயணச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. இணையம் வழியாகப் பயணச்சீட்டு வாங்குவது அதிகரித்துள்ளதால் ‘ரயில் கனெக்ட்’ செயலி போன்ற பல்வேறு தொழில்நுட்பத் தளங்களும் உருவெடுத்துள்ளன.
சராசரியாக, நாளொன்றுக்கு இந்தியாவில் 1.575 மில்லியன் ரயில் பயணச்சீட்டுகள் விற்கப்படுகின்றன. அவற்றில் 1.388 மில்லியன் பயணச்சீட்டுகள் ஐஆர்சிடிசி தளம் வழியாக முன்பதிவு செய்யப்படுகின்றன; 190,000 பயணச்சீட்டுகள் மட்டுமே கட்டண முகப்புகள் வழியாக விற்கப்படுகின்றன.
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ஐஆர்சிடிசியில் பதிவுசெய்துள்ள முகவைகளும் நிறுவனங்களும் பயணச்சீட்டு விற்பனையில் உயர்வைக் கண்டுவருகின்றன.
அத்தகைய முகவைகள் மட்டும் நாளொன்றுக்குச் சராசரியாக 400,000 முன்பதிவுப் பயணச்சீட்டுகளை விற்பனை செய்கின்றன.
பேடிஎம், கன்ஃபர்ம் டிக்கெட், அமேசான் உள்ளிட்ட 25 முதன்மைச் சேவை வழங்குநர்கள் உள்ளனர். ‘பிடிபி’ எனப்படும் தொழில்சார் திட்டத்தின்கீழ் 38 நிறுவனங்கள் முன்பதிவுப் பயணச்சீட்டுகளை வழங்குகின்றன. துணை முகவர்கள் அவற்றின்கீழ் செயல்படுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
சேவை வழங்குநர்களின் எண்ணிக்கையை ஐஆர்சிடிசி விரிவுபடுத்தினாலும் பயணிகளுக்குக் கூடுதல் நிதிச்சுமை ஏற்படுகிறது.
ஐஆர்சிடிசி சேவைக் கட்டணத்துடன் பயணச்சீட்டு முன்பதிவு செய்துதரும் முகவைக்கும் அவர்கள் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. அத்துடன், சில செயலிகள் கட்டண நுழைவாயில் கட்டணத்தையும் வசூலிக்கின்றன.
200,000 ரயில்வே ஊழியர்களுக்குப் படித்தொகை உயர்வு
இதனிடையே, ரயில் ஓட்டுநர்கள், காவலர்கள், தீயணைப்பாளர்கள் உள்ளிட்ட ஓடும் ரயில்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கான தொலைவு சார்ந்த படித்தொகை 25 விழுக்காடு உயர்த்தப்பட்டுள்ளது.
அகவிலைப்படி (Dearness Allowance) 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கிலோமீட்டர் அடிப்படையில் வழங்கப்படும் படித்தொகை உயர்வானது 2024 ஜனவரிமுதல் பின்தேதியிட்டு வழங்கப்படவுள்ளது.
இதன்மூலம் 200,000க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் பயனடைவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

