இந்தியாவில் 9 விழுக்காட்டினர் மட்டுமே பேருந்து, ரயில்களில் பயணம்

இந்தியாவில் 9 விழுக்காட்டினர் மட்டுமே பேருந்து, ரயில்களில் பயணம்

படம்: இந்து தமிழ் திசை

06 Oct 2026 - 3:21 pm

2 mins read

புதுடெல்லி: இந்தியாவில் வேலைக்குச் செல்லும் மக்களில் ஒன்பது விழுக்காட்டினர் மட்டுமே பேருந்து, மெட்ரோ ரயில் போன்ற பொதுப்போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்துவதாக அந்நாட்டு அரசு மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சு நடத்திய முதல் தேசியக் குடும்பப் போக்குவரத்து ஆய்வில் பல்வேறு விவரங்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் 43 விழுக்காட்டினர் தங்களின் சொந்த இருசக்கர வாகனங்களையே வேலைக்கான பயணங்களுக்குப் பயன்படுத்துகின்றனர். மூன்று விழுக்காட்டினர் மட்டுமே கார்களைப் பயன்படுத்துகின்றனர்.

நகர்ப்புறங்களில் வசிக்கும் பெண்களின் பயண முறையை இந்த ஆய்வு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.

நகர்ப்புற வேலைக்குச் செல்லும் பெண்களில் 21.7 விழுக்காட்டினர் பேருந்துகளையே முதன்மைப் போக்குவரத்தாக நம்பியுள்ளனர். இது ஆண்களின் பயன்பாட்டைக் காட்டிலும் (6.9%) மூன்று மடங்கு அதிகம்.

குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் பெண்கள் அதிகளவில் பேருந்துப் பயணத்தை மேற்கொள்கின்றனர். கேரளா (46.8%), தமிழ்நாட்டில் (41.1%) நகர்ப்புறப் பெண்கள் அதிக அளவில் பேருந்துகளில் பயணம் செய்கின்றனர்.

பெண்களுக்கு இலவசப் பேருந்து பயணத்திட்டத்தைச் செயல்படுத்திவரும் மாநிலங்களில், பெண்களின் பயணச்செலவு கணிசமாகக் குறைந்துள்ளதும் ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலைக்குச் செல்லும் நகர்ப்புறப் பெண்களின் சராசரி மாதாந்தர பயணச்செலவு ரூ. 564ஆக மட்டுமே உள்ளது.

பயணச் செலவைப் பொறுத்தவரை, அகில இந்திய அளவில் வேலைக்குச் செல்வதற்கான சராசரி மாதாந்தரச் செலவு ரூ.785 ஆக உள்ளது. நகர்ப்புறங்களில் வசிப்பவர்கள் பயணத்திற்காக மாதம் சராசரியாக ரூ.1,044 செலவிடுகின்றனர். இது கிராமப்புற மக்களின் பயணச் செலவை (ரூ. 612) விட 71 விழுக்காடு அதிகமாகும்.

மக்களின் போக்குவரத்துத் தேவைகளைப் புரிந்துகொண்டு, உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், புதிய வழித்தடங்களைத் திட்டமிடவும் இந்த ஆய்வுத் தரவுகள் பெரிதும் உதவும் என அரசு தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்
ரயில்பேருந்துபோக்குவரத்துமெட்ரோ ரயில்பெண்கள்பொதுப் போக்குவரத்து