இந்தியாவின் முதல் மெட்ரோ வட்ட ரயில் பாதை திறப்பு

இந்தியாவின் முதல் மெட்ரோ வட்ட ரயில் பாதை திறப்பு

2 mins read
fa4ae0aa-301e-4f79-a8fb-2005982635cd
மார்ச் 8ஆம் தேதி டெல்லியில் இந்தியாவின் முதல் பெருவிரைவு வட்ட ரயில் பாதையைத் திறந்துவைத்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. - படம்: எக்ஸ்/நரேந்திர மோடி

புதுடெல்லி: இந்தியாவிலேயே முதல் முறையாக ‘ரிங் மெட்ரோ’ என்றழைக்கப்படும் மெட்ரோ வட்ட ரயில் பாதை திறக்கப்பட்டுள்ளது.

அதனை டெல்லியில் பிரதமர் மோடி ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 8) தொடங்கி வைத்தார்.

தலைநகர் டெல்லியில் மெட்ரோ போக்குவரத்து பொதுமக்களுக்கு பேருதவியாக இருந்து வருகிறது.

தினமும் 70 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் மெட்ரோ ரயில் போக்குவரத்தைப் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், டெல்லியின் இரண்டு புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

மேலும், மூன்று புதிய மெட்ரோ ரயில் வழித்தடங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார்.

டெல்லி தீபாலி சவுக் - மஜ்லிஸ் பார்க் இடையே 9.9 கி.மீ நீள வழித்தடமும், மஜ்லிஸ் பார்க் - மவுஜ்பூர் பாபர்பூர் இடையே 12.3 கி.மீ. நீளம் கொண்ட வழித்தடமும் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

யமுனை ஆற்றின் குறுக்கே செல்லும் அந்த வழித்தடத்தில் எட்டு ரயில் நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இது, ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள மஜ்லிஸ் பார்க் - ஷிவ் விஹார் பிங்க் பாதையின் ஒரு பகுதியாகும். தற்போது இணைக்கப்பட்டுள்ள இந்த வழித்தடத்தின் மூலம் பிங்க் லைன், 71.56 கிலோமீட்டராக விரிவடைந்துள்ளது.

இது, டெல்லியின் உள்வட்ட சாலை ஒட்டியவாறு வட்ட வடிவில் இரட்டை அடுக்காக அமைக்கப் பட்டுள்ளது.

இதற்குமுன் வளைவாக இயங்கிவந்த பிங்க் லைன், புதிதாக திறக்கப்பட்ட இந்த வழித்தடத்தின் மூலம் முழு வட்டவடிவில் மாறியுள்ளது.

இதன்மூலம், இந்தியாவின் முதல் ‘ரிங்’ எனப்படும் வட்ட வடிவ மெட்ரோ வழித்தடம் என்ற பெயரைப் பெற்றுள்ளது.

மொத்தம் 18,300 கோடி ரூபாய் செலவில் கட்டமைக்கப்பட்ட இந்த மெட்ரோ வட்டப் பாதை டெல்லி மக்களின் பயண நேரத்தை வெகுவாகக் குறைப்பதுடன் போக்குவரத்து மாசு குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

டெல்லி மெட்ரோ விரிவாக்கத் திட்டத்தின்கீழ், ராமகிருஷ்ணா ஆசிரம மார்க்கில் இருந்து, இந்திரபிரஸ்தா வரையிலான சென்ட்ரல் விஸ்டா வழித்தடம், ஏரோசிட்டியில் இருந்து இந்திரா காந்தி உள்நாட்டு விமான நிலையத்தின் முதல் முனையம் வரையிலான, கோல்டன் லைன் நீட்டிப்பு உட்பட மூன்று புதிய வழித்தடங்களுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்