மும்பை: இந்தியாவிலேயே முதன்முறையாக, வாகனங்கள் செல்லும்போது இசை எழுப்பும் அதிநவீன ‘மெல்லிசைச் சாலை’ (Melody Road) மும்பையில் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
ஹங்கேரி நாட்டுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்தச் சாலை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.
மகாராஷ்டிர மாநிலம், மும்பை நரிமன் பாயின்டில் இருந்து வொர்லி நோக்கிச் செல்லும் சத்ரபதி சம்பாஜி மகராஜ் கடற்கரைச் சாலையில், அமர்சன்ஸ் கார்டன் முதல் பிரீச் கேண்டி பகுதிவரை வாகனங்கள் 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் செல்லும்போது, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமானின் புகழ்பெற்ற ‘ஜெய் ஹோ’ பாடல் தானாகவே ஒலிக்கும் வகையில் சாலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதனை அந்த மாநிலத்தின் முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் திறந்துவைத்தார்.
இந்தச் சாலையில் மின்னணு ஒலிபெருக்கிகள் கிடையாது. மாறாக, சாலையின் மேற்பரப்பில் குறிப்பிட்ட இடைவெளியில் ‘ரம்பிள் ஸ்ட்ரிப்ஸ்’ (Rumble Strips) எனப்படும் சிறிய மேடுபள்ளங்கள் செதுக்கப்பட்டுள்ளன.
வாகனங்கள் இந்த மேடுபள்ளங்கள்மீது ஓடும்போது, டயர்களுக்கும் சாலைக்கும் இடையே ஏற்படும் உராய்வு, அதிர்வுகள் காரணமாக இசை உருவாகிறது.
வாகன ஓட்டிகள் மணிக்கு 70 முதல் 80 கி.மீ. வேகத்தில் சென்றால் மட்டுமே ‘ஜெய் ஹோ’ பாடலின் மெல்லிசை காருக்குள் தெளிவாகக் கேட்கும்.
கார் கண்ணாடி மூடப்பட்டிருந்தாலும்கூட, இந்த இசை காருக்குள் இருப்பவர்களுக்குத் தெளிவாகக் கேட்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஓட்டுநர்களுக்கும் பயணிகளுக்கும் ஒரு புது அனுபவத்தை தருகிறது.
இதன்மூலம் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்திய உலகின் ஐந்தாவது நகரமாக மும்பை இடம்பெற்றுள்ளது.
ஹங்கேரி, ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் ஆகிய நாடுகளிலும் இந்தத் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. மும்பை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி, வொர்லி சுரங்கப்பாதையில் இருந்து வெளியேறிய பிறகு ஏறத்தாழ 500 மீட்டர் நீளத்திற்கு இந்த இசைப் பகுதி அமைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகளை ஒரு குறிப்பிட்ட வேகத்தில் (70 - 80 கி.மீ.) சீராகச் செல்ல வைப்பதே இதன் முக்கிய நோக்கம்.
காருக்குள் ஒலிக்கும் ‘ஜெய் ஹோ’ பயணிகளிடையே நாட்டுப்பற்றையும் உற்சாகத்தையும் ஏற்படுத்துகிறது.
இந்தச்ச் சாலை மும்பைவாசிகளுக்கும் சுற்றுப்பயணிகளுக்கும் ஒரு புதிய, வியக்கத்தக்க அனுபவத்தை வழங்கி வருகிறது.

