புதுடெல்லி: இந்தியாவின் 25 மாநிலங்களிலும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளிலும் மொத்தம் 13,056 சதுர கிலோமீட்டர் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
இது, டெல்லி, சிக்கிம், கோவா ஆகியவற்றின் ஒட்டுமொத்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகம்.
இந்தியச் சுற்றுச்சூழல் அமைச்சு கடந்த வாரம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்திடம் அளித்த அறிக்கையில் இவ்விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்விவரங்கள் கடந்த 2024 மார்ச் மாதம் வரையிலான நிலவரம் என்றும் எஞ்சிய பத்து மாநிலங்கள் ஆக்கிரமிப்பு வனப்பகுதி தொடர்பான அறிக்கைகளை இன்னும் வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில்தான் ஆக அதிகமாக 5,461 சதுர கிலோமீட்டர் வனப்பகுதி ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அசாம் மாநிலம் 3,621 சதுர கிலோமீட்டருடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, அருணாசலப் பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களிலும் குறிப்பிடத்தக்க அளவு வனப்பகுதிகள் ஆக்கிரமிப்பின்கீழ் உள்ளன.
இதுவரை 409.77 சதுர கிலோமீட்டர் வனப்பகுதி மட்டுமே ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், வன உரிமைகள் சட்டம் 2006 முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத வரையிலும் ஆக்கிரமிப்பு குறித்த உண்மையான நிலவரத்தைக் கணக்கிட முடியாது என்று சி.ஆர். பிஜோய் போன்ற வல்லுநர்கள் வலியுறுத்துவதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.