புதுடெல்லி: கடந்த சில நாள்களாக இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் நிலவி வந்த பதற்றத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், இரு நாடுகளும் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்தச் சம்மதித்துள்ளன.
இதையடுத்து, டெல்லியில் மே 10ஆம் தேதி மாலை செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய முப்படை அதிகாரிகள், மே 7ஆம் தேதி முதல் இந்தியா மேற்கொண்ட ராணுவ ரீதியான நடவடிக்கைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.
முன்னதாக, இந்தியாவும் பாகிஸ்தானும் அனைத்து வகையான ராணுவ நடவடிக்கைகளையும் சனிக்கிழமை (மே 10) மாலை 5 மணி முதல் நிறுத்திக்கொள்ள ஒப்புக்கொண்டதாக வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்தார்.
பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர் சனிக்கிழமை மாலை 3.35 மணியளவில், இந்திய தரப்பைத் தொடர்புகொண்டு பேசியதாகவும் அப்போது இந்திய நேரப்படி மாலை 5 மணி முதல் நிலம், ஆகாயம், கடல் வழி மேற்கொள்ளப்படும் அனைத்து ராணுவ நடவடிக்கைகளையும் இரு தரப்பினரும் நிறுத்துவதாக ஒப்புக்கொள்ளப்பட்டதாகவும் திரு மிஸ்ரி கூறினார்.
இந்த முடிவைச் செயல்படுத்துவது தொடர்பாக இரு தரப்பினருக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், ராணுவ நடவடிக்கைகளுக்கான இயக்குநர்கள் வரும் மே 12ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு மீண்டும் பேசத் திட்டமிட்டிருப்பதாகவும் மிஸ்ரி தெரிவித்தார்.
மிஸ்ரியின் இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள சாராம்சத்தை இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பதிவில் உறுதி செய்தார்.
“துப்பாக்கிச்சூட்டை நிறுத்துதல், ராணுவ நடவடிக்கைகள் குறித்து இந்தியாவும் பாகிஸ்தானும் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன. பயங்கரவாதத்திற்கு எதிராக அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் இந்தியா உறுதியான மற்றும் சமரசமற்ற நிலைப்பாட்டை தொடர்ந்து பராமரித்து வருகிறது. அது தொடர்ந்து அவ்வாறு செய்யும்,” என்று அப்பதிவில் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.
இருதரப்புக்கும் இடையே நான்கு நாள்களாக நீடித்த மோதல் முடிவுக்கு வந்துள்ள நிலையில், இது குறித்து அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
அமெரிக்காவின் தலையீட்டால் இரவு முழுவதும் நடந்த நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்தியா - பாகிஸ்தான் மோதலை முழுமையாக, உடனடியாக நிறுத்திக்கொள்ள ஒப்புதல் அளித்துள்ளதாகவும் இரு நாடுகளும் அறிவார்ந்த முடிவை எட்டியதற்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும் அதிபர் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏறக்குறைய 48 மணி நேரப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, இந்தியாவும் பாகிஸ்தானும் மோதலை நிறுத்திக்கொள்ள இணங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே, இனி இந்தியா மீது நடத்தப்படும் எந்தவிதமான பயங்கரவாதத் தாக்குதலும் போர்ப் பிரகடனமாகவே கருதப்படும் என்றும் வெளியுறவுச் செயலாளர் மிஸ்ரி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியிலும் பாகிஸ்தானின் மற்ற சில பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பான தகவல்களையும் இந்தியா வெளியிட்டுள்ளது.
எனினும், சிந்து நதிநீர் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திறக்கப்படுமா என்பது குறித்து இந்திய தரப்பில் இருந்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

