சென்னை: திட்டமிட்டபடி பிப்ரவரி 15ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி இலங்கைத் தலைநகர் கொழும்பில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும் கிரிக்கெட் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது.
அது, விமானப் பயணச்சீட்டுகளின் விலையிலும் எதிரொலித்து வருகிறது. பல்வேறு இந்திய நகரங்களிலிருந்து கொழும்பு செல்வதற்கான விமானப் பயணச்சீட்டுகளின் விலை மளமளவென உயரத் தொடங்கியது.
செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 10) மாலை நிலவரப்படி, டெல்லியிலிருந்து நேரடியாகக் கொழும்பு செல்வதற்கான விமானப் பயணச்சீட்டின் விலை ரூ.118,961ஆக (S$1,662) இருந்தது என்று நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவித்தது.
வழக்கமாக, அவ்விரு நகரங்களுக்கு இடையிலான நேரடி விமானப் பயணத்திற்கு 30,000 ரூபாய்க்கும் குறைவாகவே ஆகும்.
சென்னையிலிருந்து இண்டிகோ விமானத்தில் கொழும்பு சென்று திரும்ப வழக்கமாகக் கிட்டத்தட்ட ரூ.16,000 வசூலிக்கப்படும். ஆனால், வரும் வார இறுதியில் அந்தக் கட்டணம் ரூ.54,575ஆக அதிகரித்துள்ளது.
சென்னையிலிருந்து விமானம் வழியாக 80 நிமிடங்களில் கொழும்பு சென்றுவிடலாம். அதனால், பலரும் உள்நாட்டு விமானம் மூலம் சென்னை சென்று, அங்கிருந்து கொழும்பு செல்லலாம் எனத் திட்டமிடக்கூடும்.
மும்பையிலிருந்து நேரடியாகக் கொழும்பு சென்று திரும்ப விரும்பும் ரசிகர்கள் அதற்கு ரூ.82,000 கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஹோட்டல்களில் தங்குவதற்கான கட்டணமும் எகிறியிருக்கிறது. சில நட்சத்திர ஹோட்டல்கள் ஆறு முதல் பத்து மடங்குக் கட்டணம் வசூலிப்பதாகச் சொல்லப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
ஒரு புகழ்பெற்ற ஹோட்டலில் ஒருநாளுக்கான கட்டணம் 1.50 லட்சம் ரூபாயாக உள்ளது. வழக்கமான நாள்களில் அங்கு அந்தக் கட்டணம் 10,000 ரூபாயாக இருக்கும்.

