ஜெய்ப்பூர்: இந்தியா - பாகிஸ்தான் இடையே பூசல்கள் அதிகரித்துவரும் நிலையில், இந்திய இனிப்பகங்களில் சில ‘பாக்’ என முடியும் இனிப்புகளின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாண்டு ஏப்ரல் 22ஆம் தேதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் மாண்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை நோக்கி தாக்குதல்களை நடத்தியது.
அத்தாக்குதலுக்கு ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ என என இந்தியா பெயரிட்டது.
அதற்கு ஆதரவு அளிக்கும் விதமாக மைசூர் பாக், மோத்தி பாக், ஆம் பாக், கோந்த் பாக் போன்ற இனிப்புகளின் பெயர்களை மைசூர் ஸ்ரீ, மோத்தி ஸ்ரீ, ஆம் ஸ்ரீ, கோந்த் ஸ்ரீ என இனிப்பகங்கள் மாற்றியுள்ளன.
அதுகுறித்து ஜெய்ப்பூரில் செயல்பட்டு வரும் பிரபல இனிப்புக்கடையான ‘தியோஹார் ஸ்வீட்ஸ்’ உரிமையாளர் அஞ்சலி ஜெயின் கூறுகையில், “தேசபக்தியின் உணர்வு எல்லையில் மட்டும் இருக்கக்கூடாது, ஒவ்வொரு குடிமகனின் மனத்திலும் இருக்க வேண்டும். அதனால்தான் எங்கள் இனிப்புகளின் பெயர்களிலிருந்து ‘பாக்’ என்பதை நீக்கி, அதற்கு பதிலாகக் கலாசார ரீதியாக எதிரொலிக்கும் பெயரை வைக்க முடிவு செய்தோம். இந்த மாற்றத்தைச் செய்ய வாடிக்கையாளர்களே எங்களை வலியுறுத்தினர்,” என்று தெரிவித்தார்.
தற்போது ஜெய்ப்பூர் முழுவதும் உள்ள பல இனிப்பு கடைகள் தியோஹாரின் வழியைப் பின்பற்றுகின்றன.

