இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் அமளி

2 mins read
9d7848ae-21e4-4499-b39b-9e9d4ab0bd0f
எதிர்க்கட்சியினரின் கடும் அமளியால் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின. - படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கியது.

அப்போது அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, உத்தரப் பிரதேசத்தின் சம்பா பகுதியில் நடந்த வன்முறை ஆகியவற்றை குறித்து விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இதனால் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் முடங்கின. நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திங்கட்கிழமை காலை 11 மணிக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடியது. அப்போது அதானி விவகாரம், வக்பு வாரிய சட்டத் திருத்தம், மணிப்பூர் வன்முறை உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்து மக்களவையில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.

இதனைதொடர்ந்து மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத்தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். அதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அவைத் தலைவர் ஜகதீப் தன்கர் அறிவித்திருந்தார்.

இரு அவைகளும் மதியம் மீண்டும் தொடங்கியபோது, அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் மீண்டும் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனைத்தொடர்ந்து இரு நாடாளுமன்ற அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

இண்டியா கூட்டணியில் சலசலப்பு

இந்நிலையில் அதானி விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பிகளில் ஒரு பகுதியினர் மற்றும் ‘இண்டியா’ கூட்டணி கட்சியினர் இடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பாக திரிணாமுல் காங்கிரஸ், என்சிபி போன்ற கட்சிகள் அதானி பிரச்சினையை எழுப்ப ஆர்வம் காட்டவில்லை.

திங்கட்கிழமை காலை ராஜ்யசபாவின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேயின் அறையில் இண்டியா கூட்டணியில் உள்ள அணித் தலைவர்களுக்கு இடையே ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்கவில்லை. இது ‘இண்டியா’ கூட்டணிக்கு சிக்கலாக மாறியுள்ளது.

விலைவாசி உயர்வு, மணிப்பூர் வன்முறை, வேலையின்மை, நிதி தருவதில் தாமதம் உள்ளிட்ட பிரச்சினைகளில் தான் தங்கள் கவனம் உள்ளது என்று திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு கூறியுள்ளது.

குறிப்புச் சொற்கள்