பணவரவு சம்பந்தப்பட்ட இணைய விளையாட்டுகளைத் தடைசெய்ய இந்தியா திட்டம்

2 mins read
3168e612-2254-4b28-a505-cb228e552e51
கோப்புப் படம்: - ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: பணம் கட்டி விளையாடப்படும் இணைய விளையாட்டுகளைத் தடைசெய்ய இந்தியா திட்டமிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 19) பரிந்துரைக்கப்பட்ட மசோதாவில் இது தெரியவந்தது. இந்தத் தடை நடப்புக்கு வந்தால் அது பல பில்லியன் டாலர் மதிப்பிலான வெளிநாட்டு முதலீட்டுகளை ஈர்த்த இத்துறைக்குப் பின்னடைவாக அமையும்.

பணத்தைக் கொண்டு விளையாடப்படும் இணைய விளையாட்டுகளால் மனநல, நிதி ரீதியான அபாயங்கள் ஏற்படுவதன் காரணமாக இத்திட்டம் வரையப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இணைய விளையாட்டு விளம்பர, விதிமுறை மசோதா 2025ன்படி (Promotion and Regulation of Online Gaming Bill 2025) யாரும் பணத்தைக் கொண்டு விளையாடப்படும் இணைய விளையாட்டுகளை அல்லது அவை சார்ந்த சேவைகளை வழங்கக்கூடாது, அவற்றில் ஈடுபடக்கூடாது.

13 பக்கங்களைக் கொண்ட இந்த மசோதா இன்னும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. எனினும், ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் அதைப் பார்த்திருக்கிறது.

பணத்தைக் கொண்டு விளையாடப்படும் இணைய விளையாட்டுகள் என்பவை, நிதி ரீதியாக அல்லது வேறு வகைகளில் பலன்பெறும் எதிர்பார்ப்புடன் பணத்தை ‘முதலீடு’ செய்ய வைப்பவை என்று மசோதாவில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுபோன்ற விளையாட்டுகளின் மதிப்பு 2029ஆம் ஆண்டுக்குள் 3.6 பில்லியன் டாலரை (4.63 பில்லியன் வெள்ளி) எட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புதுத் தொழில்களில் முதலீடு செய்யும் நிறுவனமான (venture captial firm) லுமிக்காய் தெரிவித்துள்ளது.

முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்களும் இத்தகைய விளையாட்டுகள் சிலவற்றுக்கு விளம்பரம் செய்துள்ளனர். அதோடு, இவற்றுக்கான பல விளம்பர நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிரீம்11 (Dream11), மொபைல் பிரிமியர் லீக் போன்ற நிறுவனங்களின் கற்பனை கிரிக்கெட் விளையாட்டுகள் (fantasy cricket games) பிரபலமாக இருக்கின்றன. இவற்றில் முதலீடு செய்ய முதுலீட்டாளர்கள் அதிக விருப்பம் காட்டிவருகின்றனர்.

குறிப்புச் சொற்கள்