புதுடெல்லி: இந்திய அரசாங்கம், மதுபானங்களில் பயன்படுத்தப்படும் ‘எத்தனால்’ எனும் வேதிப்பொருள் தயாரிப்பைக் குறைக்கத் திட்டமிடுகிறது.
‘எத்தனால்’ தயாரிப்பிற்கு சர்க்கரை தேவைப்படுவது இதற்குக் காரணம்.
உள்நாட்டுச் சந்தையில் போதிய அளவில் சர்க்கரை விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்யும் நடவடிக்கை இது என்று அரசாங்க, வர்த்தகத் தகவல்கள் கூறுகின்றன.
உலக அளவில் சர்க்கரை உற்பத்தியில் இரண்டாம் இடத்தில் உள்ளது இந்தியா.
இம்முறை, கரும்பு விளையும் முக்கியப் பகுதிகளில் வழக்கத்தைவிடக் குறைவான மழைப்பொழிவு பதிவானதால் சர்க்கரை உற்பத்தி குறையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘எத்தனால்’ தயாரிப்பிற்கு, குறைவான சர்க்கரை ஒதுக்கப்படுவதன் மூலம் உள்நாட்டுச் சந்தையில் சர்க்கரை போதிய அளவில் கிடைப்பதை உறுதிசெய்ய முடியும்.
இந்திய சர்க்கரை ஆலைகள் சங்கம், 2023/2024 உற்பத்தி ஆண்டில் சர்க்கரை உற்பத்தி 8 விழுக்காடு குறையும் என்று நவம்பரில் கூறியிருந்தது.
இவ்வேளையில், கரும்புச் சாற்றை ‘எத்தனால்’ தயாரிப்பிற்குப் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் கரும்பு ஆலைகளுக்கு உத்தரவிடும் என்று கூறப்படுகிறது.
தொடர்புடைய செய்திகள்
இந்தியாவில் எரிபொருள் சில்லறை விற்பனையாளர்கள், சர்க்கரை ஆலைகளிலிருந்து ‘எத்தனால்’ வேதிப்பொருளை வாங்கி எரிபொருளில் கலப்பது வழக்கம். அதற்கு அவர்கள் அதிக விலை தருவது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சந்தை நிலவர மதிப்பீட்டின் அடிப்படையில் மத்திய அமைச்சர் குழு, இந்த ஆண்டு சர்க்கரை உற்பத்தியில் கவனம் செலுத்த முடிவெடுத்திருப்பதாக அரசாங்கத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
கடந்த ஐந்து ஆண்டுகளில் ‘எத்தனால்’ தயாரிப்பில் முதலீடு செய்த நிறுவனங்கள் அரசாங்கத்தின் புதிய முடிவால் கவலை அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

