திருமணங்கள் மூலம் மிகப்பெரிய வணிக வளர்ச்சி காணவிருக்கும் இந்தியா

திருமணங்கள் மூலம் மிகப்பெரிய வணிக வளர்ச்சி காணவிருக்கும் இந்தியா

படம்: அன்ஸ்பிளா‌ஷ் (unsplash)

19 Nov 2026 - 7:20 pm

2 mins read

வரவிருக்கும் திருமணக் காலங்களில் இந்தியா தனது வரலாற்றிலேயே மிகப்பெரிய நுகர்வு, வணிக வளர்ச்சியைக் காணவுள்ளது.

2026 நவம்பர் 21 முதல் டிசம்பர் 15 வரையிலான முதல் திருமணக் காலத்தில், நாடு முழுவதும் 5.2 மில்லியன் திருமணங்கள் நடைபெறும் என்றும், இதன்மூலம் கிட்டத்தட்ட 7.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான வணிகம் நடைபெறும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. டிசம்பர் 15ஆம் தேதிக்குப் பிறகு ஒரு மாத கால சுப நிகழ்வுகள் பொதுவாக நடைபெறாது.

அனைத்திந்திய வணிகர்கள் கூட்டமைப்பு வெளியிட்ட விரிவான அறிக்கை, திருமணக் காலம் உள்நாட்டு நுகர்வு, வேலைவாய்ப்பு உருவாக்கம், பொருளியல் வளமைக்கான வலுவான உந்துசக்தியாக உருவெடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

டெல்லி தேசியத் தலைநகர் வட்டாரத்தில் மட்டும் 500,000 திருமணங்கள் நடைபெற்று, ஏறக்குறைய 25 பில்லியன் ரூபாய் மதிப்பிலான வணிகம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அண்டை மாநில வணிகர்களும் டெல்லிச் சந்தைகளையே சார்ந்துள்ளனர்.

ஆய்வறிக்கை விவரங்கள்

மொத்தம் 25 மாநிலங்களின் மொத்த, சில்லறை விற்பனைச் சந்தைகள், 300க்கும் மேற்பட்ட வணிகத் தலைவர்கள், 550க்கும் மேற்பட்ட வணிகச் சங்கங்களிடம் நடத்தப்பட்ட கலந்தாலோசனை, கருத்தாய்வின் அடிப்படையில் இம்மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன.

சாதாரணத் திருமணத்திற்கு 400,000 முதல் 500,000 ரூபாய் வரையும், ஆடம்பரத் திருமணங்களுக்கு 40 மில்லியன் முதல் 50 மில்லியன் ரூபாய் அல்லது அதற்கு மேலும் செலவாகிறது. மொத்த வணிகத்தில் 54 விழுக்காடு பொருள்கள் விற்பனை மூலமும், 46 விழுக்காடு சேவைகள் மூலமும் கிடைக்கும். நகைகள் , ஆடைகள், உணவு சேவைகள், திருமண மண்டபங்கள் முதன்மைப் பங்கு வகிக்கின்றன.

வேலைவாய்ப்பும் தொழில்நுட்பமும்

கடந்த ஐந்தாண்டுகளில் திருமண வணிகம் சீராக வளர்ந்துள்ளது. இத்திருமணக் காலத்தில் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 12.5 மில்லியன் தற்காலிக, பருவகால, பகுதிநேர வேலைவாய்ப்புகள் உருவாகும். அலங்காரக் கலைஞர்கள், உணவு வழங்குநர்கள், புகைப்படக் கலைஞர்கள், அழகுக் கலைஞர்கள், போக்குவரத்து ஊழியர்கள் உள்ளிட்டோர் இதன்மூலம் பலனடைவர். பண்பாட்டு மரபுடைமையும் பாதுகாக்கப்படும். சில்லறை வணிகம், உற்பத்தி, விருந்தோம்பல், சுற்றுலா, போக்குவரத்து, தளவாடத் துறைகளில் தேவை அதிகரிப்பதுடன், பொருள், சேவை வரி மூலம் அரசாங்க வருவாயும் உயரும்.

குறிப்புச் சொற்கள்