கோல்கத்தா: இந்தியாவின் கோல்கத்தா நகரில் 31 வயது பயிற்சி மருத்துவரைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற ஆடவர் ஒருவர் அக்டோபர் 7ஆம் தேதி குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.
அந்தச் சம்பவத்தால் நாடு முழுதும் பேரளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
கோல்கத்தாவில் உள்ள அரசாங்க மருத்துவமனையில் ஆகஸ்ட் 9ஆம் தேதி அந்தப் பயிற்சி மருத்துவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
சஞ்சய் ராய் என்ற அந்தச் சந்தேக நபர் கொலை நடந்த மறுநாள் கைதுசெய்யப்பட்டார். அப்போதிலிருந்து அவர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். திங்கட்கிழமையன்று அவர்மீது அதிகாரபூர்வமாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆதாரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன. ராய் அந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆதரவு கொடுக்கும் தொண்டூழியராகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்.
அந்தக் கொடூரச் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, கோல்கத்தாவில் உள்ள மருத்துவர்கள் பல வாரங்களாகப் போராட்டத்தில் இறங்கினர். அவர்களுடன் பத்தாயிரக்கணக்கான சாதாரண குடிமக்களும் சேர்ந்துகொண்டனர்.
பெண் மருத்துவர்கள் அச்சமின்றி பணிபுரிவதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறைவு என்று கூறி அவர்கள் தங்கள் சினத்தை வெளிப்படுத்தினர்.
தொடர்புடைய செய்திகள்
மேற்கு வங்க மாநில அரசாங்கம் தங்களைப் பாதுகாக்க விளக்குகள், பாதுகாப்புக் கண்காணிப்புக் கருவிகள் ஆகியவற்றை மேம்படுத்த தவறிவிட்டதாக மருத்துவர்கள் கூறினர்.
இந்நிலையில், மருத்துவர்களில் பலர் வேலைக்குத் திரும்பியுள்ளபோதும், இந்த மாதத் தொடக்கத்தில் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

