தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா: ஒருநாள்கூட பணிக்குச் செல்லாத காவலருக்கு 12 ஆண்டுகளாக ஊதியம்

2 mins read
22534803-f7c2-4830-93b4-86688ec909c7
சம்பந்தப்பட்ட காவலர்மீதும் தவற்றுக்குக் காரணமான அதிகாரிகள்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக் காவல்துறை தெரிவித்துள்ளது. - மாதிரிப்படம்: ஊடகம்

போபால்: இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு காவலர் பணியில் நியமிக்கப்பட்டு ஒருநாள்கூட வேலைக்குச் செல்லாதவருக்கு 12 ஆண்டுகளுக்கும் மேலாக மாதந்தோறும் ஊதியம் வழங்கப்பட்டு வந்துள்ளது.

அவ்வகையில், அவர் வேலைக்குச் செல்லாமலேயே 28 லட்ச ரூபாய்க்கும் மேல் (S$42,200) ஊதியமாகப் பெற்றுள்ளார்.

நிர்வாகத்தில் நிலவிய கவனக்குறைவே இதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

தலைநகர் போபாலில் பணியமர்த்தப்பட்ட அந்தக் காவலர் சாகரில் அடிப்படைப் பயிற்சிக்குச் செல்லும்படி பணிக்கப்பட்டார். ஆனால், அவர் அப்பயிற்சி நிலையத்திற்கே செல்லவில்லை.

மாறாக, பணி நியமனம் செய்யப்பட்ட சற்று நேரத்திலேயே தமது சொந்த ஊரான விதிஷாவிற்கு அவர் கிளம்பிச் சென்றுவிட்டார்.

அவர் வேலைக்கு வருகிறாரா இல்லையா என்பதைக் கவனிக்காமலேயே இத்தனை ஆண்டுகாலமாகத் தொடர்ந்து அவரது வங்கிக் கணக்கில் ஊதியம் போடப்பட்டு வந்தது.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டு ஊதியம் திருத்தி அமைக்கப்பட்டபோதுதான் இந்தத் தவறு வெளிச்சத்திற்கு வந்தது.

அதுகுறித்து அவரை விசாரித்தபோது, இத்தனை ஆண்டுகாலமாகத் தாம் மனநல சிகிச்சை பெற்றுவந்ததாகக் கூறி, அதற்கான ஆவணங்களையும் சமர்ப்பித்தார்.

உடனடியே அவர் வேறு ஒரு காவல் நிலையத்தில் பணியமர்த்தப்பட்டார். இத்தனை ஆண்டுகளாகப் பணிக்கு வராதது முதற்கட்ட விசாரணையில் உறுதியானதால் அவர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த பத்து மாதங்களாக அவர்மீது துறைசார் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வழக்கு காவல்துறையின் உள்ளகச் சோதனைகள் குறித்தும் பணியாளர் மேலாண்மை முறையின் செயல்பாடு குறித்தும் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுகுறித்துக் கருத்துரைத்த காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளர் ஷ்ரதா திவாரி, சம்பந்தப்பட்ட காவலர்மீதும் தவற்றுக்குக் காரணமான அதிகாரிகள்மீதும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்