ரூ.20,000 கோடி மதிப்பில் ராணுவ வானூர்திகளை வாங்கும் இந்தியா

ரூ.20,000 கோடி மதிப்பில் ராணுவ வானூர்திகளை வாங்கும் இந்தியா

2 mins read
இதுவரை இந்த அளவுக்கு ராணுவ வானூர்திகளை இந்தியா வாங்கியதில்லை
e84701d2-cfbd-4e45-b104-6d598f8ffc76
ராணுவ வானூர்தி ஒன்று. - கோப்புப் படம்: பிடிஐ

புதுடெல்லி: இந்திய ராணுவம், இதுவரை இல்லாத அளவுக்கு ரூ 20,000 கோடிக்கும் (268.01 மில்லியன் வெள்ளி) அதிக மதிப்பிலான ராணுவ வானூர்திகளை வாங்கவிருக்கிறது.

உள்ளூர் உற்பத்தியாளர்களிடமிருந்து இந்திய ராணுவம் அந்த வானூர்திகளை வாங்கத் திட்டமிட்டுள்ளது. வழக்கத்தைவிட வேகமாக அவற்றை வாங்க நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தற்காப்புத் துறையில் பணியாற்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த 18லிருந்து 24 மாதங்களுக்குள் வானூர்திகளை அனுப்பி வைப்பதற்கான பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக வாங்கப்பட்ட வானூர்திகள்

இந்திய ராணுவம் ஏற்கெனவே சுமார் ரூ. 3,000 கோடி மதிப்பிலான உத்திபூர்வ செயல்பாட்டு வானூர்திகளை (tactical drones) வாங்கியிருந்தது. அதனைத் தொடர்ந்து அடுத்ததாக வாங்கப்படவிருக்கும் வானூர்திகள் ரூ. 20,000 கோடியைத் தாண்டலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மலிவான வானூர்திகளும் போர்க்களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதைச் சென்ற ஆண்டு மே மாதம் நடந்த ஆப்பரே‌ஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை, தற்போது தொடரும் ர‌ஷ்யா-உக்ரேன் போர் மற்றும் ஈரான்-அமெரிக்கா போர் ஆகியவை எடுத்துக்காட்டுவதாக இந்தியா டுடே குறிப்பிட்டுள்ளது.

கண்காணிப்பு, துல்லியத் தாக்குதல்கள், தளவாடங்களை விநியோகிப்பது போன்ற பல்வேறு பணிகளை வானூர்திகளால் மேற்கொள்ள முடியும். அதனால் நவீனகாலப் போர்ச்சூழலில் அவை படை பலத்தை பன்மடங்காக்கும் கருவிகளாகப் பார்க்கப்படுகின்றன.

சூடுபிடிக்கும் வானூர்தி உற்பத்தி

இந்தியாவில் தற்போது 600க்கும் அதிகமான நிறுவனங்கள் வானூர்திகள், அவற்றின் பாகங்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்துவருவதாகத் தகவல் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். அவற்றில் 100க்கும் மேற்பட்டவை தற்காப்புத் துறைக்குப் பணியாற்றிவருகின்றன.

மேலும், இத்துறையில் பெரிய தற்காப்புக் குழுக்கள், பல புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் ஆகியவையும் ஈடுபட்டுவருகின்றன.

மத்திய அரசாங்கம், ‘ஆத்மனிபர் பாரத்’ திட்டத்தின்கீழ் உள்நாட்டில் தற்காப்புக் கருவிகள், ஆயுதங்களை உற்பத்தி செய்வதை ஊக்குவித்துவருகிறது. அதேவேளை, இந்திய ராணுவம், வானூர்தி மூலம் போரிடுவதற்கான பயிற்சியை வீரர்களுக்கு அளிக்கிறது.

அதோடு, ஒவ்வொரு வீரருக்கும் ஒரு வானூர்தியைத் தயாராய் வைத்திருக்கவும் இந்திய ராணுவம் எண்ணம் கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்