புதுடெல்லி: ஹோர்முஸ் நீரிணையில் இந்தியாவின் இரண்டு கப்பல்கள் தொடர்பான துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்திற்கு புதுடெல்லியில் உள்ள ஈரான் தூதரிடம் இந்திய அரசாங்கம் நேரடியாக எதிர்ப்புத் தெரிவித்ததாக இந்திய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் இந்தியக் கொடி தாங்கிய இரண்டு கப்பல்களை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் குறித்த இந்தியாவின் ஆழ்ந்த கவலையை, ஈரானியத் தூதரிடம் அமைச்சின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி நேரடியாகத் தெரிவித்ததாக அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
போர் நிறுத்தம் நடப்பில் இருக்கும்போது வர்த்தகக் கப்பல்களுக்காக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கப்போவதாகக் கூறியிருந்த ஈரான், திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டது.
நீரிணையைச் சுற்றி அமெரிக்கக் கப்பல்கள் நிறுத்தப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அது தனது முடிவை மாற்றிக்கொண்டதால், வர்த்தகக் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 18) நீரிணையைக் கடக்க முயன்ற பல வர்த்தகக் கப்பல்கள்மீது ஈரானியப் படைகள் துப்பாக்கிச் சூடு நடத்தி, மிரட்டல் விடுத்ததாகவும் பாதுகாப்புக் கண்காணிப்பாளர்கள் கூறியுள்ளனர்.

