புதுடெல்லி: ஈரான் போர் இன்னும் முடிவுக்கு வராத சூழலில், உலகச் சந்தையில் எரிபொருள் விநியோகத்தில் கடுமையான தடங்கல்களும் இடையூறுகளும் ஏற்பட்டுள்ளன.
இதன் காரணமாக இந்திய எரிசக்தி நிறுவனங்கள், திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயுவைப் பெறுவதற்காகப் பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக உயர்ந்த தொகையைக் கொடுத்துக் கொள்முதல் செய்து வருகின்றன.
இந்திய அரசுக்குச் சொந்தமான நிறுவனமான கெயில் இந்தியா லிமிடெட், வரும் செப்டம்பரில் விநியோகிக்கப்பட உள்ள ஒரு சரக்கு எரிவாயுவுக்கு ஒரு மில்லியன் பிரிட்டிஷ் வெப்ப அலகுக்கு US$23க்கும் அதிகமான தொகையைச் செலுத்தியுள்ளது.
அதேபோல, இந்தியாவின் குஜராத் மாநில பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவனமும் செப்டம்பர் மாத விநியோகச் சரக்கிற்கு US$23 வரம்பில் பணம் செலுத்தியுள்ளதாக இந்த விவகாரம் பற்றி அறிந்த தரப்பினர் தெரிவித்தனர்.
இந்தியாவின் மூன்றாவது பெரிய எரிபொருள் வாங்கும் நிறுவனமான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் இந்த வாரம் இயற்கை எரிவாயுச் சரக்கைக் கொள்முதல் செய்ய உடன்பட்டுள்ளது. எனினும், இந்நிறுவனம் செலுத்திய இறுதி விலையை புளூம்பெர்க் செய்தி நிறுவனத்தால் உறுதியாகத் தெரிந்துகொள்ள இயலவில்லை.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய இயற்கை எரிவாயு விநியோக நாடான கத்தாரிடமிருந்து இந்தியா வழக்கமாக நீண்டகால ஒப்பந்தங்களின் அடிப்படையில் இயற்கை எரிவாயுவைக் கொள்முதல் செய்து வந்தது.
ஆனால், கத்தாரின் பிரம்மாண்டமான ஏற்றுமதி முனையம் கடந்த மார்ச் மாதத்தில் ஈரானியத் தாக்குதல்களால் பெரும் சேதமடைந்தது. அத்துடன், முக்கியக் கடல் வழியான ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் கடந்து செல்வதும் இன்னமும் பேரளவில் தடுக்கப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக, இயற்கை எரிவாயுவின் விலை ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தைத் தொட்டுள்ள வேளையில், ஐரோப்பிய கண்டத்தின் இயற்கை எரிவாயுவை வாங்குபவர்களுடனும் இந்தியா தற்போது கடுமையாகப் போட்டியிட வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


