ரூபாயில் வர்த்தகம்: இந்திய அரசு மும்முரம்

ரூபாயில் வர்த்தகம்: இந்திய அரசு மும்முரம்

2 mins read
6a03ebdf-ea84-4be2-a56d-6fbfb9fec13b
படம்: ஏஎஃப்பி -

உலக அளவில் வர்த்தகம் மெதுவடைந்து உள்ளது. இந்தச் சூழலில், இந்தியா தன்னுடைய ஏற்று மதிகளை அதிகரிக்க ஏதுவாக தனது ரூபாய் நாணயத்தில் வர்த்தகம் நடப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது.

ரூபாய் நாணயத்தை அனைத்துலகமயமாக்க இந்தியா எடுத்து வரும் முயற்சிகளுக்கு ஊக்குவிப்பாக இந்தியாவும் பங்ளாதேஷும் ரூபாயைப் பயன்படுத்த கொள்கை அளவில் இணங்கி இருக்கின்றன.

அமெரிக்க டாலரின் தேவைகளைக் குறைத்துக்கொண்டு இந்திய ஏற்றுமதிகளை அதிகப்படுத்துவது நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகிலேயே ஆக வேகமாக வளர்ந்து வரும் பொருளியலைக் கொண்ட நாடுகளில் ஒன்றான இந்தியா, கடந்த மார்ச் 31ஆம் தேதி வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை 2023ஐ வெளியிட்டது.

அனைத்துலக பரிவர்த்தனைகளில் ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்துவது அந்தக் கொள்கையின் மிக முக்கியஅம்சம். உலக வர்த்தகம் மெதுவடைந்துள்ளதால் சில நாடுகளுக்கு அமெரிக்க டாலர் கிடைப்பது சிரமமாகி உள்ளது.

அந்த நாடுகளுடன் தன் நாணயத்தைக் கொண்டு வர்த்தகத்தில் ஈடுபட இந்தியா தயாராக இருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உலக வர்த்தக மதிப்பு சென்ற ஆண்டில் US$32 டிரில்லியன் ஆக (S$42 டிரில்லியன்) இருந்தது. ஆனால் இந்த ஆண்டின் முதல் பாதியில் வர்ததகம் தேக்க மடையும் என்று தெரிகிறது.

புவிசார் அரசியல் பதற்றங்கள், பணவீக்கம் பற்றிய கவலைகள், எரிசக்தி, உணவு, உலோகப் பொருள்களின் விலை அதிகரிப்பு ஆகியவை காரணமாக உலக வளர்ச்சி நிலவரங்கள் சரியில்லை என்று ஐநா வர்த்தக, வளர்ச்சி மாநாட்டு அமைப்பின் 'உலக வர்த்தக புது நிலவரங்கள்' என்ற அறிக்கை தெரிவித்தது.

இந்தியாவுடன் கூடிய இணக்கம் பற்றி டாக்கா நகரில் இருந்து கருத்து தெரிவித்த பங்ளாதேஷ் வங்கியின் நிர்வாக இயக்குநரும் பேச்சாளருமான மெஸ்பால் ஹேக், அந்த இணக்கம் காரணமாக இரு நாடுகளின் வர்த்தகர் களுக்கும் நன்மை கிடைக்கும் எனக் கூறியதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.

ரூபாய் வர்த்தக ஏற்பாடு நடைமுறைக்கு வர இரண்டு மாதங்கள் பிடிக்கும் என்ற அந்த அதிகாரி, வர்த்தகர்கள் முதலில் மத்திய வங்கியின் அனுமதியைப் பெற்று கணக்குத் திறக்க வேண்டும் என்று விளக்கினார்.

இந்தியா-பங்ளாதேஷ் வர்த்தக மதிப்பு, 2021-22ஆம் ஆண்டில் US$18.2 பில்லியனாக இருந்தது.

இந்திய நாணயத்தில் வர்த்தகம் நடைமுறைக்கு வரவேண்டுமானால் பங்ளாதேஷ் வங்கிகள் இந்திய வங்கிகளுடன் ரூபாய் கணக்கு ஒன்றை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் இந்திய வங்கிகளும் செய்ய வேண்டும்.

அந்தக் கணக்குகளின் மூலமாகத்தான் இந்திய வர்த்தகர்கள் ரூபாயில் பணத்தைப் பெற, அனுப்ப முடியும். பங்ளாதேஷ் வர்த்தகர்கள் தங்கள் டாகா நாணயத்தை வர்த்தகத்திற்குப் பயன்படுத்தலாம்.

இந்தியாவுடன் கூடிய வர்த்த கத்தில் ரூபாய் நாணயத்தைப் பயன்படுத்த ஏற்கெனவே மலேசியா ஒப்புக்கொண்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்