தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பிற நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள முற்படும் இந்தியா

2 mins read
e95dfbd4-78bf-43da-8810-cf125648169b
அமெரிக்காவை அதிகம் நம்பியிருக்காமல் மற்ற வர்த்தகப் பங்காளித்துவங்களிலும் கவனம் செலுத்த புதுடெல்லி விரும்புவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: பிரிட்டனுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனுமான தடையற்ற ஒப்பந்தத்தில் இணைவதற்கான முயற்சிகளை இந்தியா முடுக்கி வருகிறது.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் அண்மைய வரிவிதிப்பின் பாதிப்பு அலையிலிருந்து தனது பொருளியலைத் தற்காக்கும் நோக்கத்துடன் இந்தியா விரைந்து செயல்படுவதாகக் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அமெரிக்காவை அதிகம் நம்பியிருக்காமல் மற்ற வர்த்தகப் பங்காளித்துவங்களிலும் கவனம் செலுத்தி புதுடெல்லி, தனது வர்த்தக உறவுகளின் பன்முகத்தன்மையை அதிகரிக்க விரும்புவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

உலக வர்த்தக பங்காளிகளின் மீது டிரம்ப் கடந்த வாரம் அறிவித்துள்ள கடுமையான வரிகள், நிதிச்சந்தைகளில் அமளியை ஏற்படுத்தின.

இருந்தபோதும், 10 விழுக்காட்டு வரிகளைக் காட்டிலும் கூடுதலாக உலக நாடுகளில் விதிக்கப்பட்டுள்ள வரிகள், 90 நாள்களுக்குத் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளன – சீனாவுக்குத் தவிர.  இதன்படி, இந்திய இறக்குமதிகள் மீது அமெரிக்கா அறிவித்த 26 விழுக்காட்டுக் கூடுதல் வரி தற்போது செயல்பாட்டில் இல்லை.

இதன் தொடர்பில் இந்தியா, தனது வர்த்தகப் பங்காளிகளுடனான பேச்சுவார்த்தைகளைக் கவனத்துடன் கையாள்வதாக அனைத்துலக வர்த்தக ஆலோசனை நிறுவனத்தின் தலைமை ஆலோசகர் டி.எஸ். விஷ்வநாத் தெரிவித்தார். 

அதே நேரத்தில், அமெரிக்காவுடனான ஒப்பந்த முயற்சிகளில் பின்னடைவு ஏற்பட்டால் அதனைச் சமாளிக்க பிற நாடுகளுடன் வர்த்தகப் பங்காளித்துவங்கள் தேவை என்பதை இந்தியா, நன்கறிந்து செயல்படுவதாக அவர் கூறினார். 

பிரிட்டனுடனும் ஐரோப்பிய ஒன்றியத்துடனும் இந்தியா, தடையற்ற வர்த்தக உடன்பாடுகளை வெற்றிகரமாக நடத்தும் என்பதில் நம்பிக்கையுடன் இருப்பதாகத் திரு விஷ்வநாத் தெரிவித்தார். அடுத்த சில மாதங்களில் நியூஸிலாந்துடனும் இந்தியா, வர்த்தகப் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கும் என்று அவர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்