புதுடெல்லி: நாட்டில் உள்ள 70 வயதைக் கடந்த அனைத்து மூத்த குடிமக்களுக்கும் இலவச மருத்துவக் காப்பீடு அளிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஐந்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள ($6,000) இந்த காப்பீடு திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமரின் மக்கள் ஆரோக்கிய திட்டம் (ஆயுஷ்மான் பாரத்) என்ற பெயரிலான இத்திட்டம், சமூக, பொருளாதார காரணிகளை அடிப்படையாகக் கொள்ளாமல் செயல்படுத்தப்படும் என்றும் 70 வயதுக்கும் மேற்பட்ட அனைத்து மூத்த குடிமக்களுக்கும் சுகாதார காப்பீடு கிடைக்கும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே மக்கள் ஆரோக்கிய திட்டத்தில் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஆண்டுக்கு ஐந்து லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வசதி கிடைக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக இத்திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக குறிப்பிட்டிருந்தது.
அனைத்து இந்தியர்களுக்கும் உயர் தரமான, சுகாதார வசதிகள் கிடைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் விருப்பம் என்றும் இதை நிறைவேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது என்றும் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
இப்புதிய திட்டத்தின் மூலம் ஆறு கோடி பேர் பயனடைவர் என்றும் அவர் தமது சமூக ஊடகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2018ஆம் ஆண்டு மோடி அரசாங்கம் அறிவித்த புதிய காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் பல லட்சக்கணக்கானோர் பயனடைந்திருப்பதாக பாஜகவினர் கூறுகின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், அத்திட்டம் நாட்டில் உள்ள மூத்த குடிமக்கள் பயனடையும் வகையில் விரிவுபடுத்தப்படும் என கடந்த மக்களவைத் தேர்தலின்போது பாஜக அறிவித்தது.
உலகின் ஆகப்பெரிய சுகாதாரப் பாதுகாப்புத் திட்டமாக கருதப்படும் இத்திட்டமானது, கடுமையான நோய்களுக்கான இலவச சிகிச்சையை வழங்குகிறது என்றும், ரூ.5 லட்சத்துக்கான இலவச காப்பீட்டின் மூலம் லட்சக்கணக்கான ஏழைகள் பலனடைந்துள்ளனர் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.