புதுடெல்லி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பத்தில் உலகளவில் இந்தியா 10வது இடத்தில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை (ஐநா) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘2025 - தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள்’ எனும் தலைப்பிலான ஐநா வா்த்தக, மேம்பாட்டு கழகம் வெளியிட்ட அறிக்கையில், ரூ.119 பில்லியன் தனியாா் முதலீட்டுடன் இந்தியா அவ்விடத்தில் உள்ளதாகக் குறிப்பிட்டது.
அதில் தொழில்நுட்பம் சாா்ந்த பல்வேறு வகைப்பாடுகளின்கீழ் நாடுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
‘ஏஐ’ போன்ற நவீன தொழில்நுட்பங்களுக்கான தயாா்நிலைக் குறியீட்டில், கடந்த 2022ஆம் ஆண்டு 48வது இடத்தில் இருந்த இந்தியா 12 இடங்கள் முன்னேறி இவ்வாண்டு வெளியான பட்டியலில் 36வது இடத்தில் உள்ளது.
அந்த அறிக்கையில் 170 நாடுகள் குறியீட்டின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டன.
அதேபோல் தகவல், தொலைத்தொடா்புத் துறையில் 99வது இடத்திலும், திறன் சாா்ந்த வகைப்பாட்டில் 113வது இடத்திலும், ஆய்வு மேம்பாட்டில் 3வது இடத்திலும் தொழில்துறை திறனில் 10வது இடத்திலும், நிதியில் 70வது இடத்திலும் அந்நாடு உள்ளது.
மேலும், இந்தியா, பூட்டான், மொராக்கோ, மால்டோவா ஆகிய நாடுகள் மனித மூலதன தரவரிசையில் முன்னேறியுள்ளன. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் திறன் அடிப்படையில் பணிபுரிவோரின் எண்ணிக்கை உயா்ந்ததே அதற்கு காரணமாகச் சொல்லப்படுகிறது.
இந்தியா, சீனா, ஜொ்மனி, பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் ‘ஏஐ’ தொழில்நுட்பத்தில் வலிமையான நாடுகளாக உள்ளன.
தொடர்புடைய செய்திகள்
2023ஆண்டு நிலவரப்படி, ஏஐயில் ரூ.570 லட்சம் மில்லியன் தனியாா் முதலீட்டுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.
வளா்ந்து வரும் நாடுகளை பொறுத்தவரை ‘ஏஐ’ துறையில் ரூ.665.88 பில்லியன் தனியாா் முதலீட்டுடன் சீனா இரண்டாவது இடத்தில் உள்ளது.
‘ஏஐ’ உள்கட்டமைப்பு, நிபுணத்துவம் குறிப்பிட்ட சில நாடுகளிடம் மட்டுமே உள்ளது. அமெரிக்கா, சீனாவை சோ்ந்த 100 நிறுவனங்கள் மட்டும் உலகளவிலான ‘ஏஐ’ ஆராய்ச்சி, மேம்பாட்டில் 40 விழுக்காடு பங்கு வகிக்கின்றன.
மனிதா்களுக்கு பதில் ஏஐ தொழில்நுட்பத்தால் பணிகளை மேற்கொள்ளும்போது பணியாளா்களைவிட மூலதனத்துக்கே முக்கியத்துவம் அளிக்கும் சூழல் உருவாகும். வளா்ந்து வரும் பொருளாதாரங்களில் குறைந்த செலவில் தரமான சேவைகளை செய்யும் திறன் குறையும்.
இந்திய அரசின் வழிகாட்டுதலோடு ஐஐடி ஹைதராபாத், ஐஐடி கோரக்பூா் உள்ளிட்ட உயா்கல்வி நிறுவனங்கள் தனியாா் துறையுடன் இணைந்து பணியாற்றி நவீன தொழில்நுட்ப வளா்ச்சிக்கு தொடா்ந்து பங்காற்றி வருகின்றன.
நானோ தொழில்நுட்பத்தில் இந்தியாவும், காற்றாலையில் ஜொ்மனியும், மின்சார வாகனத் துறையில் ஜப்பானும், 5ஜி தொழில்நுட்பத்தில் தென் கொரியாவும் நிபுணத்துவம் பெற்றுள்ளன.