போபால்: அண்மையில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட 12 வயதுச் சிறுமி, ரத்தம் சொட்டச் சொட்ட, அரைகுறை ஆடையுடன் வீடு வீடாகச் சென்று உதவி கோரிய காணொளி வெளியாகி, பேரதிர்ச்சி அளித்தது.
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைன் நகரில் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் பரத் சோனி என்ற ஆட்டோரிக்ஷா ஓட்டுநர் வியாழக்கிழமையன்று கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில், சோனியின் தந்தை இக்கொடூரச் செயலுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“இது வெட்கக்கேடான செயல். ஒருபோதும் நான் மருத்துவமனைக்குச் சென்று என் மகனைப் பார்க்கமாட்டேன்; காவல்நிலையத்திற்கோ நீதிமன்றத்திற்கோ செல்லமாட்டேன். என் மகன் பெருந்குற்றம் புரிந்துள்ளான். அவனைத் தூக்கில் போட வேண்டும்,” என்று செய்தியாளர்களிடம் அவர் சொன்னதாக ‘பிடிஐ’ செய்தி தெரிவிக்கிறது.
இதனிடையே, இச்சம்பவம் கோவில் நகரமான உஜ்ஜைனின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்துவிட்டது என்று உஜ்ஜைன் வழக்கறிஞர் சங்கத் தலைவர் அசோக் யாதவ் தெரிவித்துள்ளார்.
அதனால், சோனி சார்பில் யாரும் முன்னிலையாகி வாதாட வேண்டாம் என்றும் சக வழக்கறிஞர்களுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.
சம்பவம் நிகழ்ந்த மூன்று நாள்களுக்குப் பிறகு சோனி காவல்துறையிடம் சிக்கினான். குற்றம் நிகழ்ந்த இடத்திற்குச் சென்றபோது அவன் தப்பியோட முயன்றதாகவும் அப்போது அவன் காயமடைந்ததால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை விளக்கியது.
பாதிக்கப்பட்ட சிறுமி ம.பி. மாநிலத்தின் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பது தெரியவந்துள்ளது.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, அதே வயதில் சத்னாவில் ஒரு சிறுமி காணாமல் போனதாகக் காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், அச்சிறுமிதான் பாதிக்கப்பட்ட சிறுமியா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.

