6ஜி கட்டமைப்பை இந்தியா வேகமாக உருவாக்கி வருகிறது: பிரதமர் மோடி

2 mins read
74506ff8-de0b-49c5-a74f-f8bb0a64ad58
புதுடெல்லியில் நடைபெற்ற உலகத் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் தாரக மந்திரம், மெதுவடைந்து வரும் உலக வளர்ச்சியைத் தூக்கி நிறுத்த உதவும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

சீர்திருத்தம், செயல்பாடு, உருமாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கியது அந்த தாரக மந்திரம் என தலைநகர் புதுடெல்லியில் சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தலைவர்கள் கருத்தரங்கில் பங்கேற்றுப் பேசும்போது அவர் குறிப்பிட்டார்.

அந்தக் கருத்தரங்கை ‘இக்கனாமிக்ஸ் டைம்ஸ்’ நடத்தியது.

“அடுத்த தலைமுறைக்கான சீர்திருத்தம் நமது உற்பத்தியை ஊக்குவிக்கும், தொழில்துறை வளர்ச்சியை மேம்படுத்தும், நுகர்வை அதிகரிக்கும், வேலைவாய்ப்புகளைக் கூடுதலாக்கும்.

“இதுவே நமது சீர்திருத்தக் கொள்கை. வருங்கால வளர்ச்சிக்காக நம்மை நாம் தயார் செய்து வருகிறோம். புதிதாக பல்வேறு சீர்திருத்தங்களைக் கொண்டு வருவேன். அதனை நோக்கி நாங்கள் பணியாற்றி வருகிறோம்,” என்றார் மோடி.

“மேலும், இந்தியா மிக விரைவிலேயே உலகின் மூன்றாவது பெரிய பொருளியல் நாடாக உருவெடுக்கும்,” என்றார் அவர்.

தற்போது ஐந்தாவது பெரிய பொருளியல் நாடாக உள்ளது இந்தியா.

இன்னும் 22 ஆண்டுகளில், அதாவது 2047ஆம் ஆண்டில் இந்தியா தனது சுதந்திர நூற்றாண்டை எட்டுவதற்குள் மூன்றாவது பெரிய பொருளியல் நாடு என்னும் நிலையை இந்தியா அடையும் என்றார் பிரதமர் மோடி.

தொழில்நுட்ப வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், இந்தியா இதற்கு முன்னர் பல்வேறு வாய்ப்புகளைத் தவறவிட்டதை ஒப்புக்கொண்டார்.

“நாம் நமக்கான பேருந்தைத் தவறவிட்டோம். ஆனால், 2014ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த நிலையை மாற்றி வருகிறோம். பேருந்தின் ஓட்டுநர் இருக்கையில் நாம் அமரப் போகிறோம்.

“நாம் உருவாக்கி வரும், பகுதி மின்கடத்தி நுண்சில்லுவை இவ்வாண்டு இறுதிக்குள் அறிமுகப்படுத்த உள்ளோம். அத்துடன், நமது சொந்த 6ஜி இணையக் கட்டமைப்பை வேகமாக உருவாக்கி வருகிறோம்.

“ஒருகாலத்தில் 3ஜி, 4ஜி கட்டமைப்புகளுக்கு நாம் மற்ற நாடுகளைச் சார்ந்திருக்கும் நிலை இருந்தது. 2014ஆம் ஆண்டு அந்த நிலை மாறியது. 5ஜி கட்டமைப்பை நாமே உருவாக்கி அதனை நாடு முழுவதும் வேகமாக அறிமுகம் செய்தோம்,” என்று மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

கருத்தரங்கில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த தொழில்துறைத் தலைவர்கள், தொழில் முனைவோர் மற்றும் வர்த்தகச் சிந்தனையாளர்கள் கலந்துகொண்டனர்.

குறிப்புச் சொற்கள்