உலகின் நம்பிக்கைக்குரிய சில்லு உற்பத்தி மையமாவதற்கு இந்தியா தயார்: மோடி

உலகின் நம்பிக்கைக்குரிய சில்லு உற்பத்தி மையமாவதற்கு இந்தியா தயார்: மோடி

படம்: ஏஎஃப்பி

17 Sep 2026 - 7:17 pm

2 mins read

புதுடெல்லி: பகுதிமின்கடத்தித் தயாரிப்புக்குப் புதிய, நம்பகமான மையங்கள் உலகிற்குத் தேவைப்படுகின்றன என்றும் அத்தேவையை நிறைவேற்ற இந்தியா தன்னைத் தயார்ப்படுத்தி வருகிறது என்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அனைத்துலக நிறுவனங்கள் தங்களின் விநியோகத் தொடரை பன்முகப்படுத்த முயலும் சூழலில், இந்தியாவை மாற்று உற்பத்தி மையமாக அவர் முன்வைத்தார்.

புதுடெல்லியில் ‘செமிகான் இந்தியா 2026’ மாநாட்டை வியாழக்கிழமை (செப்டம்பர் 17) தொடங்கிவைத்து உரையாற்றிய அவர், கொள்கை அறிவிப்புகள், ஆலைகள் அமைக்கும் நிலையைக் கடந்து, வணிக ரீதியிலான சில்லு உற்பத்தியை நோக்கி இந்தியா தனது பயணத்தின் இரண்டாவது கட்டத்தில் அடியெடுத்து வைத்துள்ளது என்றார்.

பொதுவாக பிற நாடுகள் பத்து ஆண்டுகளில் சாதிப்பதை இந்தியா நான்கு ஆண்டுகளில் எட்டியுள்ளது என்றும், எனினும் இது ஒருபோதும் முடியாத பயணம் என்றும் அவர் விவரித்தார்.

இந்திய பகுதிமின்கடத்தித் திட்டத்தின் முதற்கட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட 12 திட்டங்களில், மூன்று திட்டங்கள் ஏற்கெனவே வணிக ரீதியிலான உற்பத்தியைத் தொடங்கிவிட்டன. தற்போது இந்திய அரசு ரூ.1.27 லட்சம் கோடி மதிப்பிலான செமிகான் 2.0 திட்டத்திற்கு மாறியுள்ளது.

இது பெரிய தொழிற்சாலைகளைத் தாண்டி உபகரணங்கள், மூலப்பொருள்கள், வடிவமைப்பு, ஆய்வு மற்றும் மேம்பாடு, விநியோகத் தொடர், திறன்மிக்க மனிதவளம் ஆகிய துறைகளில் தனது கவனத்தை விரிவுபடுத்துகிறது.

இந்தியாவில் பகுதிமின்கடத்திகளுக்கான தேவை வேகமாக உயர்ந்து வருகிறது. உள்நாட்டு உற்பத்தி ஆரம்பக்கட்டத்தில் இருக்கும் நிலையில், பயன்பாடு 2030 நிதியாண்டிற்குள் 110 பில்லியன் டாலராகவும் 2035 நிதியாண்டிற்குள் 200 பில்லியன் டாலராகவும் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2017 முதல் 2025 நிதியாண்டு வரை சில்லு இறக்குமதிக்காக இந்தியா ஏறக்குறைய 150 பில்லியன் டாலர் செலவிட்டுள்ளது. இறக்குமதி ஆண்டுக்கு 23 விழுக்காடு வளர்ச்சி கண்டு வருகிறது. எனவே, முழுமையான பகுதிமின்கடத்தி அமைப்பை உருவாக்குவதை அவசர தேசிய முன்னுரிமையாக அரசாங்கம் கருதியுள்ளது.

மேம்பட்ட தொழில்நுட்பங்களை உருவாக்க தனியார் நிறுவனங்கள் ஆய்வு, மேம்பாட்டில் அதிக அளவு பங்காற்ற வேண்டும் என்றும் திரு மோடி கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்
மோடிஇந்தியாபகுதி மின்கடத்தி