இஸ்லாமாபாத் - இந்தியாவுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் தயார் என்று அந்நாட்டுப் பிரதமர் ஷபாஸ் ஷரிஃப் கூறியுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் உள்ள கம்ரா ஆகாயப்படைத் தளத்துக்குச் சென்றபோது திரு ஷபாஸ் அதைத் தெரிவித்தார். இந்தியாவுடனான அண்மைய ராணுவத் தாக்குதலில் ஈடுபட்ட அதிகாரிகளிடமும் வீரர்களிடமும் அவர் பேசினார்.
“அமைதிக்காக இந்தியாவுடன் பேச நாங்கள் தயார்,” என்று திரு ஷபாஸ் கூறினார். திரு ஷபாஸ், அமைதிக்கான நிபந்தனைகளில் காஷ்மீர் விவகாரமும் அடங்கும் என்றார்.
யூனியன் பிரதேசங்களான ஜம்மு, காஷ்மீர், லடாக் ஆகியன இப்போதும் எப்போதும் தனது கட்டுப்பாட்டுக்குள் உள்ள பகுதிகள் என்கிறது இந்தியா.
துணைப் பிரதமர் இஷாக் டார், தற்காப்பு அமைச்சர் கவாஜா அசிஃப், ராணுவத் தலைமை ஜெனரல் அசிம் முனிர் ஆகியோருடன் ஆகாயப்படைத் தளத்துக்குப் பிரதமர் ஷபாஸ் சென்றார்.
நான்கு நாள்கள் நீடித்த கடுமையான சண்டைக்குப் பின் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே மே 10ஆம் தேதி உடன்பாடு எட்டப்பட்டது. அதன் பிறகு இரண்டாவது முறையாக திரு ஷபாஸ் தற்காப்புப் படைத் தளத்துக்கு நேரடியாகச் செல்கிறார்.
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டதற்குப் பழிவாங்க மே 6, 7ஆம் தேதிகளில் இந்தியா ஆப்பரேஷன் சிந்தூர் என்ற தாக்குதலை நடத்தியது.
பாகிஸ்தானிலும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரிலும் உள்ள ஒன்பது பயங்கரவாதத் தளங்களைக் குறிவைத்து இந்திய ராணுவப் படைகள் நடத்திய தாக்குதலில் 100க்கும் அதிகமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
தொடர்புடைய செய்திகள்
அதையடுத்து பாகிஸ்தான் பல்வேறு இந்திய ராணுவத் தளங்களை மே 8, 9, 10ஆம் தேதிகளில் தாக்க முற்பட்டது.
அதைத் தொடர்ந்து பாகிஸ்தானின் ராணுவக் கட்டமைப்புகள் மீது இந்திய ராணுவம் கடுமையான பதில் தாக்குதல்களை நடத்தியது.
கடந்த புதன்கிழமை திரு ஷபாஸ், சியல்காட்டில் உள்ள பஸ்ருரு கெண்டன்மண்ட் பகுதிக்குச் சென்று வீரர்களுடன் பேசினார்.

