‘ஆதார்’ நம்பகத்தன்மையை உறுதி செய்தது இந்திய அரசு

‘ஆதார்’ நம்பகத்தன்மையை உறுதி செய்தது இந்திய அரசு

2 mins read
cdf37eb0-d896-484d-a550-546dddbd7745
ஆதார் அட்டையில் ஒருவரின் கைரேகைகள், முகம், கண் போன்றவற்றின் மின்னிலக்கப் படங்களுடன் இணைக்கப்பட்ட தனித்துவமான எண் இருக்கும் என இந்திய அரசு தெரிவித்தது. - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்திய அரசாங்கம், ‘ஆதார்’ எனப்படும் அதன் மின்னிலக்க அடையாள அட்டையின் நம்பகத்தன்மையை மறுஉறுதிப்படுத்தியுள்ளது.

கடந்த வாரம், ஆதார் அட்டையின் ‘பயோமெட்ரிக்’ தொழில்நுட்பமுறையின் நம்பகத்தன்மையையும் அங்கீகாரத்தையும் முன்னிலைப்படுத்தி ‘மூடி’ ஆய்வு நிறுவனம் ஓர் அறிக்கையை வெளியிட்டிருந்தது. அதற்கு, இந்தியாவின் மின்னணு, தகவல், தொடர்பு அமைச்சு பதிலளித்தது.

‘மூடி’ அறிக்கையில் பகிரப்பட்ட கருத்துகளுக்கு ஆதரவாக, எந்தவொரு தரவையோ ஆய்வையோ அது மேற்கோள் காட்டவில்லை என்று அமைச்சு குறிப்பிட்டது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் வழங்கப்பட்ட ஆதார் அட்டையில் ஒருவரின் கைரேகைகள், முகம், கண் போன்றவற்றின் மின்னிலக்கப் படங்களுடன் இணைக்கப்பட்ட தனித்துவமான எண் இருக்கும் என்பதை அது சுட்டியது.

‘மூடி’ அறிக்கையில், வெயில், காற்றில் அதிகமான ஈரப்பதம் உள்ள சூழல்களில் வேலைசெய்யும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்கப் பயன்படுத்தப்படும் ‘பயோமெட்ரிக்’ தொழில்நுட்பத்தின் நம்பகத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டிருந்தது.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் போன்ற திட்டங்களின்கீழ் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அவர்களின் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது எனவும் அங்கு தொழிலாளர்களின் அடையாளங்களைச் சரிபார்க்க ‘பயோமெட்ரிக்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சு அதற்குப் பதிலளித்தது.

முக அடையாளம், கருவிழி அடையாளம் போன்ற தொடர்பில்லாத வழிகளில்கூட ‘பயோமெட்ரிக்’ சமர்ப்பிப்பு சாத்தியமாகும் என்றும் மூடி நிறுவனம் இதைப் பற்றித் தனது அறிக்கையில் குறிப்பிடவில்லை என்றும் அமைச்சு சுட்டிக்காட்டியது. பாதுகாப்பு, தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு தொடர்பான பாதிப்புகள் குறித்து அந்த அறிக்கையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, இதுவரை ஆதார் தரவுத்தளத்தில் தகவல் ஊடுருவப்பட்டதாக புகாரளிக்கப்படவில்லை என்று அமைச்சு பதிலளித்தது.

குறிப்புச் சொற்கள்