பங்ளாதேஷிலிருந்து தூதர்களின் குடும்பங்களை திரும்ப அழைக்கும் இந்தியா

2 mins read
2f3efd71-d470-49f0-941f-20c23c6740de
இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கடந்த டிசம்பர் 31ஆம் தேதி 2025 தேசியவாதக் கட்சியின் (BNP) இடைக்காலத் தலைவர் தாரிக் ரஹ்மானைச் சந்தித்து பங்ளாதேஷின் முன்னாள் பிரதமரும் அவரது தாயாருமான கலீதா ஜியாவின் மறைவுக்கு இரங்கல் தெரித்தார். - கோப்புப் படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: பங்ளாதேஷில் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு காரணமாக அங்குள்ள இந்தியத் தூதர்கள், அதிகாரிகளின் துணைவர் , குழந்தைகளை இந்தியா திரும்ப அழைப்பதாக இந்திய அதிகாரி புதன்கிழமை (ஜனவரி 21) கூறினார்.

பங்ளாதேஷில் தேர்தல் பிரசாரம் வியாழக்கிழமை (ஜனவரி 22) தொடங்குகிறது. இதனால் போராட்டங்களும் அவற்றுக்கு எதிரான போராட்டங்களும் நடக்கின்றன. 2024ஆம் ஆண்டு அங்கு நடந்த பெரும் போராட்டங்களைத் தொடர்ந்து அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்குத் தப்பிச் சென்றார். அதையடுத்து இரு அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகள் மோசமடைந்தன.

குடும்பங்களைத் திரும்ப அழைக்கும் இந்தியாவின் நடவடிக்கை “உள் மறுசீரமைப்புகளின்” ஒரு பகுதி என்று பெயர் குறிப்பிட விரும்பாத அந்த அதிகாரி ராய்ட்டர்ஸ் செய்தியிடம் கூறினார்.

இந்திய வெளியுறவு அமைச்சு குடும்பம் ‘சாரா’ தூதரகப் பணி இடமாக ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், தெற்கு சூடான் உள்ளிட்ட ஒரு சில நாடுகளை அறிவித்துள்ளது. தற்போது அந்தப் பட்டியலில் பங்ளாதேஷும் சேர்க்கப்பட்டுள்ளது.

குடும்பங்கள் எப்போது திரும்புகின்றன என்பது தெரியவில்லை. இது குறித்து இந்திய, பங்ளாதேஷ் வெளியுறவு அமைச்சுகளும் கருத்துரைக்கவில்லை.

டிசம்பரில்,பங்ளாதேஷில் மோசமடைந்து வரும் பாதுகாப்பு நிலைமை பற்றி, குறிப்பாக தலைநகர் டாக்காவில் உள்ள இந்தியத் தூதரகத்தை குறிவைத்த அச்சுறுத்தல்கள் குறித்து பங்ளாதேஷ் தூதரிடம் இந்தியா கவலை தெரிவித்தது.

நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் சிறுபான்மை இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களை குறிவைத்து வன்முறையில் ஈடுபடுவது குறித்த புதுடெல்லியின் கவலைகளை நிராகரித்த அதே வேளையில், ஹசீனாவை பங்ளாதேஷுக்கு திருப்பி அனுப்புமாறு பலமுறை கோரிக்கை விடுத்துள்ளது.

குறிப்புச் சொற்கள்