பிப்ரவரியில் 146 ஆண்டு காணாத வெப்பம்

பிப்ரவரியில் 146 ஆண்டு காணாத வெப்பம்

1 mins read
6dad7b19-2b1c-4f61-bc67-9165075cc0a1
2022 மே 12ஆம் தேதி இந்தியாவின் குஜராத் மாநிலம், அகமதாபாத்தின் புறநகர்ப் பகுதியில் செல்லும் வாகனங்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

இந்தியாவில் 1877ஆம் ஆண்டுக்குப் பிறகு அதாவது 146 ஆண்டுகளுக்குப் பிறகு 2023 பிப்ரவரியில்தான் கடும் வெப்பம் நிலவியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பிப்ரவரி மாத சராசரி வெப்பநிலை 27.8 டிகிரி செல்சியஸ் என்றும் ஆனால் இந்த பிப்ரவரியில் வெப்பம் 29.54 டிகிரி செல்சியசாக பதிவானதாகவும் இந்த அளவு இதற்கு முன் 1877 ஆம் ஆண்டில்தான் பதிவாகி உள்ளளதாகவும் மையம் கூறியது.

கடும் வெப்பநிலை தொடரும் என்பதால் மார்ச் முதல் மே வரையில் குறிப்பாக கோதுமை அதிகம் பயிரிடப்படும் வட மாநிலங்களில் அனல் காற்று வீசும் என்றது மையம்.

வெப்பம் தொடரும் பட்சத்தில் கோதுமை உள்ளிட்ட உற்பத்தி குறையும் என்றும் அதன் காரணமாக உணவு விலையைக் குறைக்க அரசாங்கம் எடுத்துவரும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படலாம் என்றும் தெரிகிறது.

இந்தியா ஆண்டுக்கு ஒரே ஒரு முறைதான் கோதுமை பயிர் செய்கிறது. அக்டோபர், நவம்பரில் தொடங்கி மார்ச் வரை அறுவடை நடக்கும்.

கடும் வெப்பம் காரணமாக சென்ற ஆண்டில் இந்தியாவில் கோதுமை உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது. அதன் காரணமாக கோதுமை ஏற்றுமதிக்கு அரசு தடைவிதித்தது.

கோடையில் மின்சாரத் தேவை அதிகரிக்கும். இதனால் மின்சாரம் பற்றாக்குறை நிலைகூட வரலாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த பிப்ரவரியில் வழக்கத்தைவிட 68% குறைவாக மழை பெய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.