புதுடெல்லி: இந்தியாவில் கடப்பிதழுக்கு விண்ணப்பிப்போர் தங்களின் வாழ்க்கை துணையின் பெயரைக் கடப்பிதழில் சேர்க்கவும் நீக்கவும் புதிய நடைமுறையை அந்நாட்டு வெளியுறவு அமைச்சு வெளியிட்டுள்ளது.
மணமானோர், தங்களின் வாழ்க்கைத்துணை குறித்த தகவலைக் கடப்பிதழில் சேர்க்க பின்பற்றிவந்த நடைமுறை சிக்கலானதாக இருந்தது. அதை எளிதாக்க ‘இணைப்பு ஜெ’ (Annexure J) எனும் புதிய பிரமாணப் பத்திரத்தைப் பயன்படுத்த அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, வாழ்க்கை துணையின் பெயரைக் கடப்பிதழில் சேர்க்க இனி திருமண சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. அதற்கு பதில், ‘இணைப்பு ஜெ’ (Annexure J) பிரமாணப் பத்திரத்தைப் பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அதில், தம்பதியர் கையொப்பமிட்டு, சுய சான்றளிக்கப்பட்ட புகைப்படத்தை இணைக்க வேண்டும். இருவரின் முழு பெயர், முகவரி, பிறந்த தேதி, திருமண நிலை, ஆதார் எண், வாக்காளர் எண், கடப்பிதழ் எண் உள்ளிட்டவற்றை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மறுமணத்திற்குப் பிறகு புதிய துணையின் பெயரைச் சேர்க்க, மணமுறிவுக்கான உத்தரவு, மறுமணச் சான்றிதழ், முன்னாள் துணையின் இறப்பு அல்லது மறுமணச் சான்றிதழ், புதுப்பிக்கப்பட்ட அடையாள ஆவணங்கள் உள்ளிட்ட விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.
இவை அனைத்தும் இந்தியக் கடப்பிதழ் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.