புதுடெல்லி: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைய தலைவர் வோல்கர் துர்க் காஷ்மீர், மணிப்பூர் விவகாரங்கள் குறித்து தெரிவித்த கருத்துகள் புது சர்ச்சைக்கு வித்திட்டுள்ளது.
“உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா தொடர்ந்து ஆரோக்கியத்துடனும் துடிப்பாகவும் பன்முகத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது என இந்தியா பதிலடி கொடுத்தது.
ஐநா மனித உரிமைகள் ஆணையத்தின் 58வது கூட்டத்தில் இந்தியா சார்பில் பங்கேற்ற அரிந்தம் பக்சி இந்தியாவின் எதிர்ப்பை ஆணித்தரமாகப் பதிவு செய்தார்.
மனித உரிமை ஆணையத் தலைவர் முன்வைத்துள்ள கருத்துகள் ஆதாரமற்றவை என்றும் அவை அடிப்படை உண்மைக்கு முரணாக உள்ளன என்றும் அரிந்தம் பக்சி குறிப்பிட்டார்.
“இத்தகைய கருத்துகளும் எண்ணங்களும் தவறானவை என்று இந்திய மக்கள் பலமுறை நிரூபித்துள்ளனர். இந்தியாவையும் அதன் பன்முகத்தன்மை, நாகரிக நெறிமுறைகளையும் நன்கு புரிந்துகொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்,” என்றார் அரிந்தம் பக்சி.
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிகரமாக நடத்தப்பட்டதை தமது உரையில் குறிப்பிட்ட திரு. பக்சி, அங்கு இம்முறை வாக்குப்பதிவு அதிகரித்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
“வளர்ந்து வரும் சுற்றுலாத்துறை, விரைவான வளர்ச்சி, எதுவாக இருந்தாலும், அந்த வட்டாரத்தின் அமைதி, அனைவரையும் உள்ளடக்கிய முன்னேற்றம் குறித்த உண்மையான, நியாயமான அண்மைய தகவல்கள் உலகளவில் சென்றடைய வேண்டும்.
முன்னதாக, மணிப்பூர், காஷ்மீர் நிலவரங்கள் குறித்து கருத்து தெரிவித்த ஐநா மனித உரிமை ஆணையர் வோல்கர் துர்க், அப்பகுதிகளில் நிகழ்ந்து வரும் வன்முறை, மக்கள் இடம்பெயரும் சம்பவங்கள் தொடர்பாக தீவிர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.
தொடர்புடைய செய்திகள்
மேலும், இது தொடர்பான முயற்சிகள் பேச்சுவார்த்தை, அமைதியை நிலைநாட்டுவது மற்றும் மனித உரிமைகளுக்கு மதிப்பளித்து மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.
“மனித உரிமை பாதுகாவலர்கள், சுயாதீன பத்திரிகையாளர்களுக்கு எதிரான கட்டுப்பாட்டுச் சட்டங்களைப் பயன்படுத்துவதும், அவர்கள் துன்புறுத்தல்களுக்கு ஆளாவது குறித்தும், காஷ்மீர் உட்பட பிற மாநிலங்களில் தன்னிச்சையான தடுப்புக்காவல் மற்றும் குடிமை இடம் குறைந்து வருவது பற்றியும் தாம் கவலை கொண்டுள்ளதாகவும் திரு துர்க் குறிப்பிட்டிருந்தார்.
“இந்தியாவின் ஜனநாயகமும் நிறுவனங்களும் அதன் மிகப்பெரிய பலமாக இருந்து, அதன் பன்முகத்தன்மை மற்றும் வளர்ச்சியை ஆதரித்து வருகின்றன. சமூகத்தின் அனைத்து மட்டங்களும் அதில் பங்கேற்பதும் அதன் அம்சங்களைத் தொடர்ந்து வளர்த்தெடுப்பதும் ஜனநாயகத்திற்கு மிக அவசியம்,” என்றார் திரு துர்க்.