தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியா-ரஷ்யா உறவு கடலைவிட ஆழமானது: புட்டினைச் சந்தித்த ராஜ்நாத் சிங் புகழாரம்

2 mins read
7322c61d-b769-49c1-8f01-0a825923b8bd
கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்த இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங். - படம்: இந்திய ஊடகம்

மாஸ்கோ: இந்திய தற்காப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மாஸ்கோவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினைச் சந்தித்துப் பேசி உள்ளார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா-ரஷ்யா நட்புறவு, உலகின் மிக உயர்ந்த மலையை விட உயரமானது; உலகின் மிக ஆழமான கடலைக் காட்டிலும் ஆழமானது என்றார்.

இந்தியா-ரஷ்யா இடையேயான உறவை வலுப்படுத்தும் வகையில் ராஜ்நாத் சிங், மூன்று நாள் பயணமாக ரஷ்யா சென்றுள்ளார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ரஷ்யாவில் உள்ள இந்திய வம்சாவளியினருடன் கலந்துரையாடிய அவர், கலினின் கிராட் நகரில் திங்கட்கிழமை நடந்த நிகழ்ச்சியில் ‘ஐஎன்எஸ் துஷில்6’ என்ற கப்பலை அறிமுகப்படுத்தி, ரஷ்யாவிடம் இருந்து அதனைப் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து, செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) மாஸ்கோ நகருக்குச் சென்ற ராஜ்நாத் சிங், இரண்டாம் உலகப் போரில் வீரமரணம் எய்திய வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், மாஸ்கோ கிரெம்ளின் மாளிகையில் ரஷ்ய அதிபர் புட்டினை ராஜ்நாத் சிங் சந்தித்தார். இருநாட்டு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து அவ்விருவரும் ஆலோசித்தனர்.

பின்னர் பேசிய ராஜ்நாத் சிங், “இந்தியா-ரஷ்யா நட்புறவு உலகின் மிக உயரமான மலையை விட உயர்ந்தது.

“உலகின் மிக ஆழமான கடலைவிட ஆழமானது. இந்தியா தனது ரஷ்ய நண்பர்களுக்கு எப்போதும் துணை நிற்கும். எதிர்காலத்திலும் அதைத் தொடருவோம்,” என்றார்.

ரஷ்யா-இந்தியாவுக்கு இடையிலான உறவு மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது என இருநாட்டு தலைவர்களும் தெரிவித்தனர்.

இருவரும் சந்தித்துக்கொண்ட நிகழ்வு காணொளிப் பதிவாக வெளியாகி உள்ளது.

ராஜ்நாத் சிங், தமது எக்ஸ் பக்கத்தில் புட்டினைச் சந்தித்த புகைப்படத்தை பதிவு செய்து, ‘அதிபர் புட்டினைச் சந்திப்பதில் மகிழ்ச்சி’ என்று பதிவிட்டுள்ளார்.

குறிப்புச் சொற்கள்