21 கி.மீ. தூரம் நீருக்குள் செல்லும் இந்தியாவின் முதல் அதிவேக ரயில்

1 mins read
4c1a214c-8b80-4924-b841-882f32c08daa
இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் நவ்சரி பகுதியில் ரயில் பாதையைத் தாங்கும் தூண்கள். படம்: தேசிய அதிவேக ரயில் கழகம் -

மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் இருந்து குஜராத்தின் அகமதாபாத் நகர் வரை இயக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் அதிவேக ரயில், தானே பகுதியை ஒட்டி 21 கிலோ மீட்டர் தொலைவுக்கு தண்ணீருக்குள் செல்லுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் தண்ணீருக்குள் பயணம் செய்யும் அனுபவத்தை பயணிகள் பெறமுடியும்.

ரூ.1.08 லட்சம் கோடி மதிப்பில் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட இருக்கிறது. தற்போது 26 விழுக்காட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் இன்னும் நான்கு ஆண்டுகளில் இந்த ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

ஜப்பானின் ஷின்கான்சென் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்தத் திட்டம் நடைபெற்று வருகிறது.

மும்பையில் இருந்து புறப்படும் அதிவேக ரயில், மகாராஷ்டிராவில் ஒரு நிறுத்தத்தில் நிற்கும். அதன் பிறகு குஜராத்தில் சூரத் மற்றும் சபர்மதி ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

முன்னதாக, இந்தத் திட்டம் இவ்வாண்டு டிசம்பருக்குள் முடிவடையும் எனக் கூறப்பட்டது. எனினும், நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக திட்டம் முடிவடையும் காலம் தள்ளிப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.