தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சீக்கியர் ஆர்ப்பாட்டங்கள் குறித்து பிரதமர் மோடி பெருங்கவலை

1 mins read
6f72a03a-1776-4bb5-9fd5-892beff36320
புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டுக்கு இடையே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவைச் சந்தித்தார். - படம்: இஎஃப்இ

டொரோன்டோ: இந்தியாவுக்கு எதிராக கனடாவில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்கள் குறித்து இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் பெருங்கவலை தெரிவித்துள்ளார்.

புதுடெல்லியில் நடைபெற்ற ஜி20 மாநாட்டுக்கு இடையே அவர்கள் சந்தித்ததாக இந்தியா வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டது.

கனடாவில் உள்ள சீக்கிய ஆர்ப்பாட்டக்காரர்கள் தொடர்பான விவகாரம் இந்தியாவில் நீண்டகாலமாகவே சர்ச்சைக்குரிய ஒன்றாக இருந்துவந்துள்ளது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தமது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட படுகொலையைச் சித்திரிக்கும் ஊர்வலத்தை கடந்த ஜூன் மாதம் அனுமதித்ததற்காக புதுடெல்லி கனடாவைச் சாடியது.

“அவர்கள் பிரிவினைவாதத்தைத் தூண்டுகிறார்கள். இந்திய அரசதந்திரிகளுக்கு எதிராக வன்முறையைக் கிளப்புகிறார்கள். அரசதந்திர வளாகங்களைச் சேதப்படுத்துகிறார்கள். கனடாவில் உள்ள இந்திய சமூகத்தினரையும் தாங்கள் பிரார்த்தனை செய்யும் இடங்களையும் மிரட்டுகிறார்கள்,” என்று இந்திய அறிக்கை தெரிவித்தது.

இந்நிலையில் இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையிலான உறவில் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. செப்டம்பரில் இந்தியாவுடன் நடைபெறவேண்டியிருந்த வர்த்தக உடன்பாடு தொடர்பான பேச்சுவார்த்தையை ஒட்டாவா நிறுத்திவைத்தது.

ஜி20 மாநாட்டின்போது பல உலகத் தலைவர்களுடன் இருதரப்புக் கூட்டங்களை நடத்திய திரு மோடி திரு ட்ரூடோவுடன் கூட்டம் நடத்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்