தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

கர்நாடகாவில் ஆட்சியைக் கைப்பற்றியது காங்கிரஸ்

2 mins read
cd0cd75b-b66a-4152-a3ac-9acca17cf552
படம்: ஏஎஃப்பி -

இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. அங்கு 224 தொகுதிகளுக்கு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 113 தொகுதிகளையும் தாண்டி, 132 தொகுதிகளில் வென்று மேலும் 4 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இதன்மூலம் அக்கட்சி மகத்தான வெற்றியைப் பதிவுசெய்தது.

மதச்சார்பற்ற ஜனதா தளம், சுயேச்சைகளின் ஆதரவு தேவையின்றி தனித்து ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்.

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னோட்டமாக கர்நாடக சட்டமன்றத் தேர்தல் பார்க்கப்படுகிறது.

இத்தேர்தலில் காங்கிரசின் வெற்றி குறித்து தலைநகர் புதுடெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகத்துக்கு வெளியே செய்தியாளர்களிடம் நேற்று பேசிய மூத்த தலைவர் ராகுல் காந்தி, "காங்கிரசின் வெற்றி கர்நாடக மக்களின் வெற்றி," எனக் கூறினார்.

"ஏழை, எளியவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் நின்றது. கர்நாடகாவின் வெறுப்புச் சந்தை மூடப்பட்டு அன்பு நிலையம் திறக்கப்பட்டுள்ளது," என்று அவர் கருத்துரைத்தார்.

தேர்தலில் 63 தொகுதிகளில் வென்று 2ல் முன்னிலை வகித்த பாரதிய ஜனதா கட்சி, தான் ஆளும் ஒரே தென்னிந்திய மாநிலத்தையும் இழந்தது.

இத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கட்சிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார்.

காங்கிரஸ் கட்சி இம்முறை மீண்டும் அரியணையில் ஏற வேண்டும் என்ற முனைப்பில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, டி.கே.சிவகுமார், சித்தராமையா, மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் மாநிலம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

அதேபோல் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் பாஜகவும் தீவிர பிரசாரம் மேற்கொண்டது. பிரதமர் மோடி, இந்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரும் தொகுதிவாரியாக பிரசாரம் மேற்கொண்டனர். மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்களுக்குப் பலமாக இருக்கும் தொகுதிகளில் களம் கண்டது.

கர்நாடகாவில் ஆளும் கட்சி இரண்டாவது தவணைக்காலத்திலும் ஆட்சியைத் தொடர இயலாத 38 ஆண்டுகால நிலையைத் தகர்த்தெறிய பாஜக தீவிரமாக முயற்சி செய்தபோதும் அதற்குப் பலன் கிடைக்கவில்லை.

இத்தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்ட கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை, தோல்வி குறித்து பாஜக முழுமையாக ஆராயும் என்று சொன்னார்.

இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் மூத்த தலைவர்கள் ஆலோசனை நடத்துகின்றனர். ஆட்சி அமைக்க காங்கிரஸ் உரிமை கோரவுள்ள வேளையில், கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பது பற்றி மக்களின் கவனம் திரும்பியுள்ளது.

முன்னாள் முதல்வர் சித்தராமையா, காங்கிரஸ் மாநிலத் தலைவர் டி.கே.சிவகுமார் முதல்வர் பதவிக்கு முன்னணி வேட்பாளர்களாக உள்ளனர்.

குறிப்புச் சொற்கள்