சிந்து நதி நீர் ஒப்பந்தம் இனி எப்போதும் செயல்படுத்தப்படாது: அமித்‌‌‌ஷா

2 mins read
3c5fb922-fe92-4c1d-a966-b891d9ce1768
பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீர் ராஜஸ்தானுக்குத் திருப்பிவிடப்படும் என்று அமித்‌‌‌‌‌‌ஷா கூறினார். - படம்: ராய்ட்டர்ஸ்

புதுடெல்லி: இந்தியா, பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இனி எப்போதும் செயல்படுத்தாது என்று தெரிவித்துள்ளது.

சனிக்கிழமை (ஜூன் 21) இந்திய உள்துறை அமைச்சர் அமித்‌‌‌ஷா ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’வுக்கு கொடுத்த நேர்காணலில் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்குச் செல்லும் சிந்து நதி நீர் இந்தியப் பகுதிகளில் திருப்பிவிடப்பட்டுப் பயன்படுத்தப்படும் என்று திரு அமித்‌‌‌ஷா குறிப்பிட்டார்.

“பாகிஸ்தானுக்குச் செல்லும் நதி நீர் ராஜஸ்தானுக்குத் திருப்பிவிடப்படும். அதற்கான கால்வாய்கள் கட்டப்படும்,” என்று அவர் சொன்னார்.

இந்தியா, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அமித்‌‌‌ஷாவின் கருத்து வெளியாகியுள்ளது.

அமி‌‌‌ஷாவின் கருத்து தொடர்பாகப் பாகிஸ்தான் பதில் ஏதும் தெரிவிக்கவில்லை.

1960ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கு இடையே சிந்து நதி நீர் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

இந்த நதி நீர் ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இதன்மூலம் பாகிஸ்தானின் 80 விழுக்காட்டு விவசாய நிலங்களுக்கு நீர் கிடைக்கும்.

பாகிஸ்தான் அனைத்துலகச் சட்டத்தின்கீழ் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைச் செயல்படுத்த முயற்சி செய்யக்கூடும் என்று கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.

அண்மையில் கா‌ஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டனர்.

சுற்றுலாப் பயணிகள்மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலைப் பயங்கரவாத நடவடிக்கையெனக் குறிப்பிட்டு இந்தியா பாகிஸ்தானைச் சாடியது. பின்னர் பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்துவதாக அறிவித்தது.

பாகிஸ்தான் கா‌ஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிவருகிறது. கடந்த மே மாதம் இரு நாடுகளும் தத்தம் எல்லைகளில் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டன. இந்தப் பூசல் முழுப்போராக மாறுவதற்கு முன்னர் பேச்சுவார்த்தைமூலம் அமைதி திரும்பியது.

குறிப்புச் சொற்கள்