அணுவாற்றல் உத்தரவாதச் சட்டத்தில் திருத்தம் செய்ய இந்தியா திட்டம்

2 mins read
0b816172-a3e5-4271-8f3d-77bd6b7c754a
பிரதமர் நரேந்திர மோடி இந்த வாரம் அமெரிக்கா செல்லத் திட்டமிட்டுள்ள நேரத்தில், இந்தியா அணுவாற்றல் உத்தரவாதச் சட்டத் திருத்தம் குறித்து அறிவித்துள்ளது. - கோப்புப்படம்: ஊடகம்

புதுடெல்லி: இந்தியாவின் மூன்று அணு உற்பத்தி நிலையங்களுக்கான வரம்புகளை அமெரிக்கா நீக்கியுள்ளது. அதன்மூலம் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து மின் உற்பத்தி, மருத்துவத்துறை உள்ளிட்ட நன்மை பயக்கும் திட்டங்களுக்கு அணுவாற்றலைப் பயன்படுத்த அமெரிக்காவின் வரம்பு விலக்கு வழிவிட்டுள்ளதாகப் பார்க்கப்படுகிறது.

இருப்பினும், 2010ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அணுவாற்றல் உத்தரவாதச் சட்டத்தின் சில பிரிவுகளின் அடிப்படையில் இந்தியா - அமெரிக்காவிடையே அணு உடன்படிக்கை எட்டப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்தியா, தனது அணு உத்தரவாதச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளவிருப்பதாக சனிக்கிழமை அறிவித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி இந்த மாதத்திற்குள் அமெரிக்காவுக்குச் செல்லத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதற்கு முன்னதாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா செல்லவிருக்கும் பிரதமர் மோடி, அங்கு அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பைச் சந்தித்து வர்த்தகம், ஆற்றல், பாதுகாப்பு உள்ளிட்ட பல துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே உள்ள ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அணுவாற்றல் உத்தரவாதச் சட்டங்களைத் திருத்துதல் மற்றும் அணுவாற்றல் ஆராய்ச்சி நிலையம் உருவாக்கும் திட்டத்தையும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையைச் சமர்ப்பிக்கும்போது அறிவித்திருந்தார்.

20,000 கோடி ரூபாய் அளவில் சிறிய தொகுதிகளான அணு உலைகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிலையம் நிறுவப்படும். 2033 ஆம் ஆண்டுக்குள் குறைந்தபட்சம் ஐந்து உள்ளூர் ஆராய்ச்சி நிலையங்கள் இயங்கும் என்று அவர் கூறினார்.

மேலும், “இந்த நோக்கத்திற்காக தனியார் துறையின் அனைத்துலகப் பங்காளிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட, அணுவாற்றல் சட்டம் மற்றும் அணுவாற்றல் உத்தரவாதச் சட்டங்களில் திருத்தம் மேற்கொள்ளப்படும்,” எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

1962ஆம் ஆண்டின் அணுவாற்றல் உத்தரவாதச் சட்டம், தனியார் நிறுவனங்களை அந்தத் துறையில் முதலீடு செய்யத் தடைசெய்கிறது. இந்த சட்டத் திருத்தத்தால் அந்தத் தடை நீக்கப்படும்.

அணுவாற்றல் துறையில் சிறந்து விளங்கும் அமெரிக்க நிறுவனங்களான ஜெனரல் எலக்ட்ரிக், வெஸ்டிங்ஹவுஸ் ஆகியவை இந்தியாவில் அணு ஆலைகளை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றன என்றும் அமைச்சர் கூறினார்.

குறிப்புச் சொற்கள்