புதுடெல்லி: இந்தியாவில் இளையர்களின் போராட்டங்களைத் தொடர்ந்து, தற்போது பள்ளி மாணவர்களும் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லாததைக் கண்டித்தும் அடிப்படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தியும் பள்ளி மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
ராஜஸ்தான் மாநிலம், ஜோதவாசில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் வகுப்பறைப் பற்றாக்குறை, நீர்க்கசிவு, விளையாட்டுத் திடல் இல்லாதது ஆகியவற்றைச் சுட்டிக்காட்டி ஆகஸ்ட் 13ஆம் தேதி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
அப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவியான தன்னு சர்மா, மூன்று வகுப்பறைகள் மட்டுமே பயன்பாட்டில் இருப்பதாகவும் மழைக்காலத்தில் அவை ஒழுகுவதாகவும் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு ஆதரவாக கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரும் (சிஜேபி) களமிறங்கியதை அடுத்து, மாணவர்களின் கோரிக்கைகளை உள்ளூர் நிர்வாகம் ஏற்றுக்கொண்டது. ஆறு ஆசிரியர்கள் பணியில் நியமிக்கப்பட்டனர்; விளையாட்டுத் திடல் அமைப்பதற்கான பணியும் தொடங்கியது. அதனையடுத்து, ஆகஸ்ட் 14ஆம் தேதி மாணவர்களின் போராட்டம் கைவிடப்பட்டது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அரசு உண்டு உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த கிட்டத்தட்ட 200 மாணவியர், ஆசிரியர் பற்றாக்குறையையும் தரமற்ற உணவையும் கண்டித்து, ஆகஸ்ட் 17ஆம் தேதி மழையையும் பொருட்படுத்தாது தலைநகர் லக்னோவின் முக்கியச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
அம்மாநிலத்தின் மகோபா மாவட்டத்தில் குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைக்கக் கோரி, ஆகஸ்ட் 19ஆம் தேதி கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் நெடுஞ்சாலையில் போராடிய மாணவர்களைக் காவல்துறை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
அதுபோல, மத்தியப் பிரதேச மாநிலம், உஜ்ஜைனியில் பள்ளியை இடமாற்றம் செய்யும் திட்டத்திற்கு எதிராக கிட்டத்தட்ட 800 மாணவியர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டங்கள் இந்தியாவின் அரசுப் பள்ளிக் கட்டமைப்பில் உள்ள குறைபாடுகளை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்துள்ளதாகக் கூறப்படுகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜிடிபி) கல்விக்காக மூன்று விழுக்காடு மட்டுமே செலவிடப்படுகிறது. சிஜேபி கட்சியின் ‘பள்ளிகளைச் சீரமையுங்கள்’ விழிப்புணர்வு இயக்கம், பள்ளிகளின் மோசமான நிலைய சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தியது.
இதன் விளைவாக, ராஜஸ்தானில் 300 பள்ளி கட்டடங்களைச் சீரமைக்க 4.09 பில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் பள்ளியில் மது அருந்திய முதல்வர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இருப்பினும், போராட்டங்களுக்குப் பிறகு சில இடங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு, ஆய்வுக்குச் சென்ற சிஜேபி குழுவினர்மீது தாக்குதல்களும் நடத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், முறையான நிதி ஒதுக்கீடு, தகுதிவாய்ந்த ஆசிரியர்கள் நியமனம், அனைவரையும் உள்ளடக்குதல், பகுத்தறிவு, சமயச் சார்பின்மை, அறிவியல் மனப்பான்மை போன்ற கருப்பொருள்களை உள்ளடக்கிய பாடத்திட்டம் போன்ற வழிகளில் கல்வி அமைப்பில் நிலையான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்துகின்றனர்.


