தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

டைட்டானியம் உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு: தற்காப்புத் துறையில் புதுப் பாய்ச்சல்

2 mins read
0de5474b-9fa6-435e-96a0-4da17d10de0e
பிரம்மோஸ் ஏவுகணைக்கு டைட்டானியம் மிக அவசியம் என்கின்றனர் தற்காப்புத்துறை நிபுணர்கள் - படம்: ஊடகம்

புதுடெல்லி: டைட்டானியம், கலப்பு உலோகங்கள் (சூப்பர் அலாய்ஸ்) உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது.

டைட்டானியம் உற்பத்தியில் ஒருசில நாடுகள் மட்டுமே ஈடுபட்டுள்ளன. இப்போது இந்தியாவும் அதில் இணைந்துள்ளது. இதன் மூலம் தற்காப்புத் துறையில் இந்தியா பெரும் பாய்ச்சல் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லக்னோவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் ‘பிடிசி இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனம், இந்திய ராணுவத்தின் முக்கிய அங்கமாக உள்ள பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணை அமைப்புகளை உருவாக்குவதற்கு அவசியமான டைட்டானியம், கலப்பு உலோகங்களை உற்பத்தி செய்கிறது.

‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின்போது பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளைச் செயலிழக்கச் செய்த பிரம்மோஸ் ஏவுகணைக்கு இந்தப் பொருள்கள் மிக அவசியமானவை என தற்காப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதுவரை ரஷ்யா, சீனா, பிரான்ஸ், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் மட்டுமே டைட்டானியம் உற்பத்தி திறன் கொண்ட நாடுகளாக இருந்தன.

நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க்கப்பல்கள் கட்டுவதற்கும், போர் விமானங்களை உருவாக்குவதிலும் டைட்டானியம், கலப்பு உலோகங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன என்றும் இதற்காக பல ஆண்டுகளாக இந்தியா மற்ற நாடுகளைச் சார்ந்திருந்தது என்றும் சொல்கிறார் பிடிசி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சச்சின் அகர்வால்.

“தற்போது இந்தியாவிலும் நவீன தொழில்நுட்பங்களும் டைட்டானியம் போன்ற அத்தியாவசியப் பொருள்களும் உள்ளன. எனவே, இனி முழுவீச்சில் செயல்படலாம்.

“முக்கியமான உற்பத்திக்கூறுகள், தொழில்நுட்பங்களில் உள்ள இடைவெளியைக் குறைப்பதே எங்கள் நோக்கம். இதனால் வேறு எந்த நாடும் இந்தியாவை மிரட்ட முடியாது,” என்றும் சச்சின் அகர்வால் தெரிவித்துள்ளார்.

டைட்டானியம் உற்பத்தி செய்யும் ஐந்து நாடுகளில், ரஷ்யா ஆண்டுக்கு சுமார் 1,75,000 டன்கள் உற்பத்தி செய்கிறது, இது உலக உற்பத்தியில் 35 விழுக்காடாக உள்ளது.

பிடிசி நிறுவனம் தற்போது, 1,500 டன் டைட்டானியம் உற்பத்தி செய்வதாகவும் ஆண்டு இறுதிக்குள், மொத்த உற்பத்தித்திறன் 6,500 டன்களை எட்டும் என எதிர்பார்ப்பதாகவும் அந்நிறுவனத்தின் தொழில்நுட்ப மற்றும் தர இயக்குநர் அலோக் அகர்வால் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்