புதுடெல்லி: அகல ரயில் பாதையில் ஓடக்கூடிய 200 ரயில் பெட்டிகளை பங்ளாதேஷுக்கு அனுப்புவதற்கான ஒப்பந்தத்தின் முதற்கட்டமாக 18 ரயில் பெட்டிகளை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
ரூ.915 கோடி மதிப்பிலான அந்த ஒப்பந்தத்தின்கீழ் எஞ்சிய ரயில் பெட்டிகள் அனைத்தும் 2027 டிசம்பருக்குள் விநியோகம் செய்யப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பங்ளாதேஷ் முழுவதும் தற்போது இயக்கத்தில் உள்ள ரயில்கள் மிகவும் பழையவை. அந்தப் பழைய ரயில் பெட்டிகளுக்குப் பதிலாகப் புதிய, நவீன ரயில் பெட்டிகளைச் சேர்ப்பதற்கான திட்டத்திற்கு ஐரோப்பிய முதலீட்டு வங்கி நிதியளிக்கிறது.
ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஏழு வகைப் பெட்டிகளில் நான்கு வகையான பெட்டிகள் அடங்கும்.
முதற்கட்டமாக அனுப்பப்பட்டுள்ள 18 ரயில் பெட்டிகளில் 11 பெட்டிகள் குளிரூட்டி வசதி இல்லாதவை.
பவர் கார் எனப்படும் இரண்டு ரயில் பெட்டிகளும் அந்த எண்ணிக்கையில் அடங்கும். அந்தப் பெட்டிகளில் பாதுகாவல் அதிகாரிகளுக்கான தனி அறைகளும் சரக்குகளை வைப்பதற்கான இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன.
ரயில் பெட்டிகளைத் தயாரித்து வழங்கும் இந்தியாவின் ‘ரைட்ஸ்’ (RITES) நிறுவனம் இது குறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
“இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 18 ரயில் பெட்டிகள் பங்களாதேஷ் ரயில்வேக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
“கபூர்தலாவில் உள்ள ரயில் பெட்டித் தொழிற்சாலையிலிருந்து அந்த முதல் தொகுதிப் பெட்டிகள் அனுப்பப்பட்டுள்ளன.
“இது ‘ரைட்ஸ்’ நிறுவனத்தின் ஏற்றுமதிப் பயணத்தில் மற்றொரு மைல்கல்,” என்று அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பயணிகளின் வசதிக்காக, துருப்பிடிக்காத உலோகத்திலான கைப்பிடிகளும் கால் தாங்கிகளும் கொண்ட சாய்வு இருக்கைகள் பலவிதச் சாய்வு நிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், குளிரூட்டிப் பெட்டிகளில் மின்விசிறிகள், ஒருங்கிணைக்கப்பட்ட சிசிடிவி கண்காணிப்பு அமைப்பு, பயணிகள் அவசர எச்சரிக்கை மணி, ஒருபக்கம் மட்டும் திறக்கக்கூடிய சன்னல்கள், குழந்தைகள் பராமரிப்பு அறை, வழிபாட்டு அறை உள்ளிட்ட பல வசதிகள் புதிய ரயில் பெட்டிகளில் இடம்பெற்றுள்ளன.
அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்யும் நேரங்களில் மேற்கூரையின்மேல் பயணிகள் ஏறிவிடுவதால் ஏற்படும் கூடுதல் சுமையைத் தாங்கும் வகையில் கூரை அமைப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது.
பங்களாதேஷில் ரயில்கள் மின்மயமாக்கப்படாததால், ரயில் கூரையின்மீது பயணிகள் ஏறிப் பயணம் செய்வது வழக்கமாக நடந்து வரும் செயல்.
மேலும், புதிய ரயில் பெட்டிகளின் மின் அமைப்புகளும் பங்களாதேஷ் ரயில்வேயின் தேவைகளுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
இந்திய ரயில்வே 750 வோல்ட் மின் அமைப்பைப் பயன்படுத்தும் நிலையில், பங்களாதேஷிற்கு விநியோகிக்கப்படும் பெட்டிகள் அங்குப் புழக்கத்தில் உள்ள 415 வோல்ட் மின் அமைப்பில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
