வெனிசுவேலாவிற்கு 35 டன் உதவிப் பொருள்களை அனுப்பியது இந்தியா

வெனிசுவேலாவிற்கு 35 டன் உதவிப் பொருள்களை அனுப்பியது இந்தியா

1 mins read
89511e27-92f6-4e23-945f-9aac20d27269
இந்தியா தனது ராணுவ நடமாடும் மருத்துவமனையையும் 35 டன்னுக்கும் அதிகமான உதவிப்பொருள்களையும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) வெனிசுவேலாவிற்கு அனுப்பியது. - படம்: எஸ்.ஜெய்சங்கர்/எக்ஸ்

புதுடெல்லி: வெனிசுவேலாவில் ஏற்பட்ட இரண்டு ஆற்றல்மிகு நிலநடுக்கங்களால் மாண்டோர் எண்ணிக்கை 900ஐத் தாண்டிவிட்டது; மேலும் பல்லாயிரக்கணக்கானோரைக் காணவில்லை.

இந்நிலையில், அங்குள்ள மக்களுக்கு உதவ இந்தியா தனது ராணுவ நடமாடும் மருத்துவமனையையும் 35 டன்னுக்கும் அதிகமான உதவிப்பொருள்களையும் வெள்ளிக்கிழமை (ஜூன் 26) அனுப்பியது.

இந்திய விமானப் படையின் இரண்டு சி-17 வகை போக்குவரத்து விமானங்கள் அந்த உதவிப்பொருள்களை ஏற்றிச் சென்றன.

இந்தியாவின் இந்த உதவி நடவடிக்கை ‘ஆப்பரேஷன் அமிஸ்தாத்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ‘அமிஸ்தாத்’ என்றால் வெனிசுவேலாவின் அதிகாரத்துவ மொழியான ஸ்பானிய மொழியில் ‘நட்பு’ என்று பொருள்.

இந்திய அரசால் உருவாக்கப்பட்ட இரண்டு ‘பீஷ்ம கியூப்ஸ்’ கட்டமைப்புகளும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அவை பேரிடர்க் காலங்களில் அவசர சிகிச்சை அளிப்பதற்காக மிக விரைவாகச் செயல்படுத்தக்கூடிய நடமாடும் மருத்துவக் கட்டமைப்புகளாகும்.

அத்துடன், தேடல், மீட்புப் பணிகளில் உதவ இந்திய தேசியப் பேரிடர் மீட்புப் படையினரும் வெனிசுவேலா சென்றுள்ளனர்.

“இந்த இக்கட்டான நேரத்தில் வெனிசுவேலா அரசுக்கும் மக்களுக்கும் ஆதரவளிக்க இந்தியா கடமைப்பட்டுள்ளது,” என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு ஒரு நிமிட இடைவெளியில் 7.2 மற்றும் 7.5 ரிக்டர் அளவில் உலுக்கிய இரு நிலநடுக்கங்கள் வெனிசுவேலாவில் பேரழிவை ஏற்படுத்தியுள்ளன.

அனைத்துவகைச் செய்திகளும் ஒரே இடத்தில்.

தற்போது சுவிட்சர்லாந்து, மெக்சிகோ, எல் சால்வடோர், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் அனைத்துலக மீட்புக் குழுவினரும் அங்கு மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்