புதுடெல்லி: நேப்பாளத்திற்கு மேலும் 11 டன் எடையிலான துயர்தணிப்புப் பொருள்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளம், நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள நேப்பாளத்திற்கு இந்தியா தொடர்ந்து மனிதநேய உதவிகளை வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, மருந்துகள், தடயவியல் விநியோகப் பொருள்கள், கூடாரங்கள், சுகாதாரக் கருவிகள் உள்ளிட்ட 11 டன் நிவாரணப் பொருள்களை இந்தியா சனிக்கிழமை (செப்டம்பர் 19) அனுப்பி வைத்தது.
நேப்பாளத்தின் மீட்சிக்கு இந்தியா என்றும் உறுதுணையாக இருக்கும் என்று இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பல மாவட்டங்களில் நேப்பாள அதிகாரிகள் தேடல், மீட்பு, நிவாரணப் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி, நேப்பாள வெள்ளத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,410ஆகப் பதிவானது. இன்னும் 6,055 பேரைக் காணவில்லை என்றும் மொத்தம் 13,756 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் அதிகாரிகள் கூறினர்.
அண்மைய பேரிடரைத் தொடர்ந்து நேப்பாளத்திற்கு ஒன்பதாவது முறையாக இந்தியா துயர்தணிப்பு உதவிகளை அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இரு நாட்டு அதிகாரிகளும் மீட்புப் பணிகள், மருத்துவ உதவிகள், உடல்களை அடையாளம் காணுதல், அத்தியாவசியப் பொருள்களை விநியோகித்தல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
