புதுடெல்லி: இந்தியா, 2027ஆம் ஆண்டுக்குள் ஐந்து டிரில்லியன் டாலர் (6.40 டிரில்லியன் வெள்ளி) மதிப்புள்ள பொருளியலாக உருவெடுக்கும் நிலையில் இருப்பதாக அந்நாட்டின் வர்த்தக, தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தியுள்ளார்.
வரும் 2027ஆம் ஆண்டுக்குள் உலகின் மூன்றாவது ஆகப் பெரிய பொருளியலாக உருவெடுக்கத் தாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளதாக அவர் கூறினார் என்று என்டிடிவி ஊடகம் தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் ‘வளர்ந்த பாரதம் 2047’ (Viksit Bharat 2047) திட்டத்துடன் அரசாங்கம், வர்த்தகச் சமூகம், தொழில்துறைகள் உள்ளிட்ட தரப்புகள் மட்டுமின்றி 1.4 பில்லியன் இந்தியர்களும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒத்துப்போவதாக திரு கோயல் குறிப்பிட்டார்.
திரு மோடியின் தலைமையில் இந்திய அரசாங்கம் வளர்ச்சி மட்டுமின்றி அனைவரையும் உள்ளடக்குவது, நீடித்த நிலைத்தன்மை அம்சம் கொண்ட நாணயமான வளர்ச்சியிலும் கவனம் செலுத்தியிருப்பதாக அவர் சுட்டினார்.
வணிகர் வர்த்தக, தொழில்துறைச் சபை (Merchants’ Chamber of Commerce and Industry) நிகழ்ச்சி ஒன்றில் திரு கோயல் பேசினார். அந்நிகழ்ச்சி, ‘5 டிரில்லியன் டாலர் பொருளியலாக வளரும் பாதையில் இந்தியா படையெடுக்கிறது: உலகச் சவால்களைக் கையாள்வது’ என்ற கருப்பொருளைக் கொண்டிருந்தது.
“நமது வங்கிக் கட்டமைப்பு, அதிகக் கடன் வழங்கும் ஆற்றலுடன் வலுவாகவும் திடமாகவும் உள்ளது. நமது பணவீக்க விகிதமும் இந்தியா இதுவரை கண்டதில் மிகக் குறைவானவற்றில் ஒன்றாக இருக்கிறது - மீண்டும் மூன்று விழுக்காட்டுக்குக் குறைந்துள்ளது,” என்று அவர் விவரித்தார்.
பலவீனமான ஐந்து பொருளியல்களில் ஒன்றாக இருந்த இந்தியா, இப்போது உலகின் ஆகப் பெரிய ஐந்து பொருளியல்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது என்றும் திரு கோயல் பெருமைப்பட்டார்.
மேலும், “அமைதியான சூழலில் சிறந்த பொருளியல்கள் உருவாக்கப்படுவதில்லை என்பதை வரலாறு நமக்குப் புகட்டுகிறது. சவாலான சூழல்களில்தான் சிறந்த பொருளியல்கள் உருவாக்கப்படுகின்றன,” என்றும் அவர் வலியுறுத்தினார். இது, இந்தியாவுக்கான நேரம் என்றும் வாய்ப்பைத் தவறவிடக்கூடாது என்றும் திரு கோயல் சுட்டினார்.

