புதுடெல்லி: இந்தியா தனக்கென விண்வெளி ஆய்வு நிலையம் அமைக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த 11 ஆண்டுகளில் விண்வெளித் துறையில் இந்திய அரசு பல சீர்திருத்தங்களைச் செயல்படுத்தி உள்ளதாக அவர் காணொளி ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய விண்வெளி தினத்தையொட்டி, அவர் தனது வாழ்த்துகளை காணொளியாகப் பதிவு செய்துள்ளார்.
“இந்திய விண்வெளித் துறை ஒன்றன்பின் ஒன்றாக, பல மைல்கற்களை எட்டியுள்ளது. இன்று இந்தியா அரை கிரையோஜினிக் இன்ஜின்கள், மின்சார உந்துவிசை போன்ற தொழில்நுட்பங்களில் வேகமாக முன்னேறி வருகிறது.
“விரைவில் ககன்யான் திட்டத்தைத் தொடங்க உள்ளோம். இந்தியா தனது சொந்த விண்வெளி நிலையத்தை உருவாக்கும்,” என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
பேரிடர் மேலாண்மை, தேசியத் திட்டத்தில் புவிசார் தரவுகளைப் பயன்படுத்துதல் ஆகியவற்றுடன் விண்வெளி தொழில்நுட்பமும் இந்திய அரசு நிர்வாகத்தின் ஒரு பகுதியாக மாறி வருகிறது என்று குறிப்பிட்ட பிரதமர் மோடி, விண்வெளித் துறையில் இந்தியாவின் இன்றைய முன்னேற்றம் சாதாரண பொதுமக்களின் வாழ்க்கையை எளிதாக்கி வருவதாகத் தெரிவித்தார்.