சீஷெல்ஸின் நம்பிக்கையான பங்காளி இந்தியா: பிரதமர் மோடி

சீஷெல்ஸின் நம்பிக்கையான பங்காளி இந்தியா: பிரதமர் மோடி

2 mins read
267f881e-f999-43d3-8f60-bb918fa75a99
சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி. - படம்: பிடிஐ

புதுடெல்லி: சீஷெல்ஸ் நாட்டின் 50வது பொன்விழா சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை (ஜூன் 27) வரலாற்றுச் சிறப்புமிக்க உரை நிகழ்த்தினார்.

அப்போது, சீஷெல்ஸ் நாட்டின் என்றும் மாறாத நம்பிக்கைக்கு உரிய பங்காளி இந்தியா என்பதை அவர் திட்டவட்டமாக உறுதிப்படுத்தினார்.

கடலோரப் பாதுகாப்பு, பருவநிலை மாற்றம், மின்னிலக்கத் தொழில்நுட்பம், வளர்ச்சித் திட்டங்கள் போன்றவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான தொலைநோக்குப் பார்வையைப் பிரதமர் மோடி தமது உரையில் குறிப்பிட்டார்.

“ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு இரு நாடுகளுக்கும் இடையே தூதரக உறவுகள் தொடங்கப்பட்டபோது நமது நட்பு ஆரம்பித்ததாகக் கூறப்படுவது தவறு. நமது உறவு அதற்கும் முன்பு பல காலத்திற்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்தியப் பெருங்கடல் இந்தியாவையும் சீஷெல்ஸையும் பிரிக்கவில்லை; மாறாக அது நம்மை ஒன்றாக இணைக்கிறது. அதனால்தான் நாம் எப்போது சந்தித்தாலும் பழைய நண்பர்களாகவே சந்திக்கிறோம்,” என்று சீஷெல்ஸ் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி கூறினார்.

கடந்த 1770ஆம் ஆண்டிலேயே இந்தியர்கள் முதன்முதலில் சீஷெல்ஸ் மண்ணில் கால்பதித்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தை நினைவுகூர்ந்த அவர், இரு நாடுகளுக்கும் இடையே உள்ள ஆழமான பண்பாட்டுத் தொடர்புகளைப் பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் இரு நாடுகளின் பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவை எப்படி ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்துள்ளன என்பதையும் அவர் எடுத்துரைத்தார்.

கடந்த 1976ல், சீஷெல்ஸ் நாடு சுதந்திரம் அடைந்தபோது, அதன் விக்டோரியா துறைமுகத்தில் இந்தியாவின் ஐஎன்எஸ் நீல்கிரி போர்க்கப்பல் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, தற்போது 50வது பொன்விழா ஆண்டிலும் இந்தியாவின் ஐஎன்எஸ் தர்காஷ், ஐஎன்எஸ் இக்‌ஷாக் ஆகிய நவீனப் போர்க்கப்பல்கள் சீஷெல்ஸ் மண்ணில் இருப்பதைப் பெருமையோடு சொன்னார்.

இரு நாடுகளின் ராணுவத்துக்கும் கடலோரக் காவல் படைகளுக்கும் இடையே நிலவும் ஒத்துழைப்பைப் பாராட்டிய அவர், இந்தியாவின் ‘மகாசாகர்’ எனப்படும் பரஸ்பர வட்டாரப் பாதுகாப்பு, பங்காளித்துவ தொலைநோக்குத் திட்டத்தின்கீழ் இரு நாடுகளின் உறவை மேலும் பலப்படுத்த இருதரப்பிலும் சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்