பழச்சாற்றில் சிறுநீரைக் கலந்து விற்றவருக்கு அடி உதை

2 mins read
bc88c37f-dd03-4fa7-a6bc-01c8c77d2fdf
தகவலறிந்து கடையின்முன் திரண்ட உள்ளூர்வாசிகள் கடைக்காரரை நையப்புடைத்தனர். - படங்கள்: இந்திய ஊடகம்

காஸியாபாத்: பழச்சாற்றுடன் சிறுநீரைக் கலந்து விற்ற கடைக்காரரைப் பொதுமக்கள் நையப் புடைத்தனர்.

இச்சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், காஸியாபாத்தில் நிகழ்ந்தது.

இதனைத் தொடர்ந்து, ‘குஷி ஜூஸ் கார்னர்’ என்ற அக்கடையின் உரிமையாளர் ஆமீர் கானையும் அங்குப் பணியாற்றிய சிறுவனையும் காவல்துறை கைதுசெய்தது.

பழச்சாற்றுடன் மஞ்சள் நிற திரவத்தை ஆமிர் கலந்ததைச் சிலர் கண்டதையடுத்து, அவரது குட்டு வெளிப்பட்டது. விரைவில் அக்கடையின்முன் பலரும் திரண்டு, ஆமிரையும் கடையில் உதவியாளராக வேலை செய்த சிறுவனையும் அடித்து உதைத்தனர்.

தகவலறிந்ததும் அங்கு விரைந்த காவல்துறை, ஆமிரின் கடையில் சோதனை மேற்கொண்டது. அப்போது, சிறுநீர் நிரப்பப்பட்ட ஒரு கலனை அது கைப்பற்றியதாகக் கூறப்பட்டது.

ஆமிர் அவ்வாறு செய்ததற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய முயன்று வருவதாகக் காவல்துறை உயரதிகாரி பாஸ்கர் வர்மா கூறினார்.

கடையில் சிறுநீர் அடங்கிய கலன் இருந்ததற்கு ஆமிர் கூறிய பதில் பொருத்தமானதாக இல்லை என்றும் அவர் சொன்னார்.

“பழச்சாற்றில் சிறுநீர் கலந்து விற்கப்படுவதாக வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 13) தகவல் கிடைத்தது. உடனே அங்குச் சென்ற காவல்துறை, கடையிலிருந்து கிட்டத்தட்ட ஒரு லிட்டர் சிறுநீரைக் கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து, ஆமிர் கைதுசெய்யப்பட்டார். அவர்மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்,” என்று திரு வர்மா கூறினார்.

கைப்பற்றப்பட்ட திரவம் பகுப்பாய்விற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பனிக்கூழுடன் தமது விந்தைக் கலந்ததாகக் கூறி, தெலுங்கானா மாநிலத்தில் வணிகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. உள்ளூர்வாசிகள் அந்த ஆடவரைக் கையும் களவுமாகப் பிடித்து காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

குறிப்புச் சொற்கள்