நவீன ஹெலிகாப்டர்களை வாங்க சாதனை அளவாக ரூ.62,700 கோடிக்கு ஒப்பந்தம்

2 mins read
de899da1-6d47-40f8-b66f-820f6ef320ac
புதிய ஹெலிகாப்டர்களில் ராணுவப் படைக்கு 90 ஹெலிகாப்டர்களும் ஆகாயப் படைக்கு 66 ஹெலிகாப்டர்களும் அளிக்கப்படும். - படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: இந்திய ராணுவத்தின் ஆயுதப் படைக்கு ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல்ஸ் (HAL) நிறுவனத்திடம் இருந்து ரூ.62,700 கோடி மதிப்பிலான 156 இலகு ரக போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை (மார்ச் 28) ஏற்படுத்தப்பட்ட அந்த ஒப்பந்தம் இந்திய ராணுவம் செய்துள்ள ஆக அதிக மதிப்புள்ளது.

கொள்முதல் செய்யப்படும் ‘பிரச்சந்த் (Prachand)‘ ஹெலிகாப்டர்களில், ராணுவப் படைக்கு 90 ஹெலிகாப்டர்களும் ஆகாயப் படைக்கு 66 ஹெலிகாப்டர்களும் பயன்படுத்தப்படும்.

அந்த ஹெலிகாப்டர்களில் 20 மில்லிமீட்டர் துல்லிய, அதிநவீன துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு இருக்கும். அத்துடன் 70 மில்லிமீட்டர் ராக்கெட் இணைப்புக் கருவிகளும் அதில் இருக்கும்.

லடாக், சியாச்சின் கிளேசியர் போன்ற கிழக்குப் பகுதிகளில் ஆக உயரத்திலிருந்து தரையிலும் வானிலும் தாக்குதல் இலக்குகளைக் கண்டறியும் திறன் கொண்டவை அந்த ஹெலிகாப்டர்கள்.

அதாவது, 5,000 மீட்டர் (16,400 அடி) உயரத்திலிருந்து வேகமாகத் தரையிறங்கவும் உடனடியாக வானை நோக்கிப் புறப்பட்டுச் செல்லவும் அவற்றால் முடியும்.

156 ஹெலிகாப்டர்களை வாங்குவதற்குச் செலவிடப்பட இருக்கும் ரூ.62,700 கோடியின் ஒரு பகுதி அந்த ஹெலிகாப்டர்களை இயக்குவதற்கான பயிற்சிக்குச் செலவிடப்படும்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ரூ.3,887 கோடி ஒப்பந்தத்தின்கீழ் 15 ஹெலிகாப்டர்கள் வாங்கப்பட்டன.

அவற்றில் ஆகாயப் படைக்கு 10, ராணுவத்துக்கு 5 எனப் பிரித்து வழங்கப்பட்டன.

‘பிரச்சந்த்’ இலகு ரக ஹெலிகாப்டர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு இந்திய ஆகாயப் படையில் அறிமுகம் செய்யப்பட்டன.

நடப்பு நிதியாண்டில் மட்டும் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட பொருள்களை வாங்க 2.09 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை தற்காப்பு அமைச்சு செய்திருக்கிறது.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனம் கர்நாடக மாநிலத்தில் செயல்படும் பெங்களூரு மற்றும் துமகூரு தொழிற்சாலைகளில் இருந்து இந்த ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

குறிப்புச் சொற்கள்