புதுடெல்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைத் தாக்குதலுடன் பாகிஸ்தான், இந்தியாவைத் தொடர்புபடுத்த முயற்சி செய்வதாகக் கூறப்படுகிறது.
அதற்கு இந்தியா வன்மையாகக் கண்டனம் தெரிவித்துள்ளது. அந்தக் குற்றச்சாட்டு, பாகிஸ்தான் அரசாங்கத்தின் ‘ஆதாரமற்ற, எதிர்பார்க்கக்கூடிய உத்தி’ என்று இந்தியா சாடியுள்ளதாக நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.
உள்நாட்டு அரசியல் நெருக்கடியிலிருந்து கவனத்தைத் திசை திருப்ப பாகிஸ்தான் அவ்வாறு செய்வதாக இந்தியா கூறியுள்ளது. பாகிஸ்தான் அரசாங்கத் தலைவர்களின் கருத்துகள் குறித்து ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த இந்திய வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ரந்தீர் ஜைஸ்வால், “மிகுந்த குழப்ப நிலையில் இருக்கும் பாகிஸ்தான் தலைமைத்துவம் முன்வைக்கும் ஆதாரமற்ற, எவ்வித அடிப்படையும் இல்லாத இந்தக் குற்றச்சாட்டுகளை இந்தியா திட்டவட்டமாக மறுக்கிறது,” என்று அறிக்கையில் எடுத்துரைத்தார்.
செவ்வாய்க்கிழமை (நவம்பர் 11) நடத்தப்பட்ட இஸ்லாமாபாத் தாக்குதலுக்கு தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. எனினும், பாகிஸ்தானிய பிரதமர் ஷெபாஸ் ஷரிஃப், 12 பேரைப் பலிவாங்கிய அந்தத் தாக்குதலுடன் இந்தியாவைத் தொடர்புப்படுத்த முயற்சி செய்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
அந்தத் தாக்குதல், பாகிஸ்தானை நிலைகுலையச் செய்யும் நோக்கில் இந்திய அரசாங்கத்தின் நிதி ஆதரவில் தொடரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் அடங்கும் என்று அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.

