புதுடெல்லி: பாலின சமநிலைக் குறியீட்டில் இந்தியா கடந்த ஆண்டைக் காட்டிலும் இரண்டு புள்ளி இறங்கி 131வது இடத்தைப் பிடித்து உள்ளது.
உலகளாவிய அந்தக் குறியீட்டிற்கான பட்டியலில் 148 நாடுகள் இடம்பெற்று உள்ளன. கடந்த ஆண்டு 129வது இடத்தைப் பிடித்த இந்தியா இவ்வாண்டு 131வது இடத்திற்கு இறங்கிவிட்டது.
கடந்த ஆண்டும் அதற்கு முந்திய 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் இரண்டு புள்ளிகள் இந்தியா இறங்கி இருந்தது.
உலகப் பொருளியல் கருத்துமன்ற அமைப்பின் ‘பாலின இடைவெளி அறிக்கை 2025’ வியாழக்கிழமை (ஜூன் 12) வெளியிடப்பட்டு உள்ளது.
அதில், தெற்கு ஆசியாவில் பாலின ஏற்றத்தாழ்வு அதிகம் காணப்படும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இடம்பெற்று உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் குறியீட்டில் இந்தியா இறக்கம் கண்டு வருவது ஆண், பெண் பாலின சமத்துவம் குறைந்து வருவதையே காட்டுவதாகக் கூறப்படுகிறது.
நான்கு அளவீடுகளைப் பயன்படுத்தி குறியீட்டுக்கான இடம் நிர்ணயிக்கப்படுகிறது.
பொருளியல் பங்கேற்பு மற்றும் அதற்கான வாய்ப்பு, கல்வித்தரம், சுகாதாரம் மற்றும் ஆயுள், அரசியல் அதிகாரம் ஆகியன அந்த நான்கு அளவுகோல்கள்.
பட்டியலின் முதலிடத்தில் ஐஸ்லாந்து 16வது ஆண்டாகத் தொடர்கிறது. அங்கு ஆண், பெண் பாலின வேற்றுமை மிகவும் குறைந்து காணப்படுவதால் குறியீட்டில் அது முதலிடத்தைப் பிடித்து உள்ளது.
தொடர்புடைய செய்திகள்
அதற்கு அடுத்த இடங்களில் ஃபின்லாந்து, நார்வே, பிரிட்டன், நியூசிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. அரசியல் அதிகாரத்தில் பெண்களின் பங்கேற்பு குறைந்துவிட்டது. நாடாளுமன்றத்தில் பெண்களின் பிரதிநிதித்துவம் கடந்து ஆண்டு 14.7 விழுக்காடாக இருந்தது. இவ்வாண்டு அது 13.8 விழுக்காட்டுக்கு இறங்கிவிட்டது.
அதேபோல அமைச்சர் பதவிகளில் பெண்களின் பங்கு 6.5 விழுக்காட்டில் இருந்து 5.6 விழுக்காடாகச் சரிந்துவிட்டது என்று உலகப் பொருளியல் மன்ற அறிக்கை தெரிவித்து உள்ளது.
உலக அளவிலான ஊழியரணியில் பெண்களின் பங்களிப்பு 41.2 விழுக்காடாக இருப்பினும் உயர்மட்ட தலைமைத்துவப் பதவிகளில் 28.6 விழுக்காட்டுப் பெண்களே உள்ளனர்.