புதுடெல்லி: பங்ளாதேசுக்கு வழங்கி வந்த மருத்துவ விசாக்களின் எண்ணிக்கைகளை இந்தியா குறைத்து வருகிறது.
எப்போதும் வழங்குவதுபோல் மருத்துவ விசாக்களை வழங்குமாறு பங்ளாதேஷ் கோரிக்கைவிடுத்துள்ளது. இருப்பினும் ஆள்பற்றாக்குறை எனக் கூறி இந்தியா விசா கொடுக்க மறுக்கிறது.
இது இரண்டு நாடுகளுக்கு இடையிலான உறவில் விரிசல் ஏற்படுத்துவதாகவும் இந்த வாய்ப்பைச் சீனா பயன்படுத்திக்கொண்டு பங்ளாதேசுடன் உறவை வலுப்படுத்துவதாகவும் கவனிப்பாளர்கள் கருதுகின்றனர்.
2023ஆம் ஆண்டு பங்ளாதேசுக்கு மருத்துவ விசாக்களை அள்ளிக்கொடுத்தது இந்தியா. வங்காள மொழியில் பேசும் மருத்துவமனைகளை அதிக அளவில் பங்ளாதேஷ் மக்கள் நாடினர்.
இதனால் இரண்டு நாடுகளின் நட்பும் வலுப்பெற்றது. அதே நேரம் சீனாவின் செல்வாக்கை பங்ளாதேஷில் வளராமல் இந்தியா பார்த்துக்கொண்டது.
இதற்கு முன்னர் ஒரு நாளுக்கு 5,000 முதல் 7,000 மருத்துவ விசாக்களை பங்ளாதேஷ் மக்களுக்கு இந்தியா வழங்கியது. தற்போது ஒரு நாளுக்கு 1,000 விசாக்கள் மட்டுமே இந்தியா வழங்குகிறது.
இந்தியா விசா வழங்க மறுப்பதால் பங்ளாதேஷ் மக்கள் தாய்லாந்து மற்றும் சீனாவை நாடுகின்றனர்.