புதுடெல்லி: செயற்கை நுண்ணறவு (ஏஐ) வளர்ச்சியில் இந்தியா முன்னணியில் உள்ளதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஐந்து நாள் மாநாட்டை திங்கட்கிழமை (பிப்ரவரி 16) தொடங்கி வைத்துப் பேசிய பிரதமர் மோடி, ஏஐ-யின் வளர்ச்சி இந்தியாவின் இலக்கையும் பொறுப்பையும் பிரதிபலிப்பதாகச் சொன்னார்.
புதுடெல்லி, பாரத் மண்டபத்தில் பிப்ரவரி 16 முதல் 20 வரை நடைபெறும் இம்மாநாட்டில் உலகத் தலைவர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், ஐநா பொதுச் செயலாளர் உள்ளிட்ட முக்கியமானவர்கள் பலர் பங்கேற்கின்றனர். 3,250க்கும் மேற்பட்ட பேச்சாளர்கள், குழுவினரைக் கொண்ட 500க்கும் மேற்பட்ட அமர்வுகள் இடம்பெறுகின்றன. வேலைகள் முதல் சிறார்கள் பாதுகாப்புவரை பல்வேறு அம்சங்கள் குறித்து மிகப் பரந்த அளவில் விவாதிக்கப்பட உள்ளது.
“உலகளாவிய செயற்கை நுண்ணறிவு நிர்வாகம், ஒத்துழைப்புக்கான பெருந்திட்டம்” என்று மாநாட்டின் இலக்கை முன்னதாக, தமது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
“அறிவியல், தொழில்நுட்பத் துறைகளில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது என்பதற்கு இம்மாநாடு மற்றொரு சான்றாகும். மேலும், இது இந்திய இளையர்களின் திறனைக் காட்டுகிறது” என்று அவர் கூறினார்.
“ஏஐ பற்றி விவாதிக்க உலகை ஒன்றிணைக்கிறோம். இதில் பங்கேற்கும் உலகத் தலைவர்கள், தொழில்துறைத் தலைவர்கள், புதுமைவிரும்பிகள்,கொள்கை வகுப்பாளர்கள், ஆய்வாளர்கள், தொழில்நுட்ப ஆர்வலர்களை அன்புடன் வரவேற்கிறேன்,” என்றார் அவர்.
“’அனைவருக்கும் நலன், அனைவருக்கும் மகிழ்ச்சி’ என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த மாநாடு, மனிதனை மையமாகக் கொண்ட முன்னேற்றத்திற்காக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் இந்தியாவின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.
“சுகாதாரம், கல்வி, விவசாயம், நிர்வாகம், தொழில்முனைப்பு உள்ளிட்ட பல துறைகளை ஏஐ இன்று மாற்றி வருகிறது. இந்த மாநாடு புதுமை, ஒத்துழைப்பு, பொறுப்பான பயன்பாடு ஆகியவற்றுடன் ஏஐ தொழில்நுட்பத்தின் பல்வேறு அம்சங்கள் குறித்த உலகளாவிய விவாதத்தை வளப்படுத்தும்,” என்று திரு மோடி குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அத்துடன், மாநாட்டின் முடிவுகள் முற்போக்கான, புதுமையான, வாய்ப்பு சார்ந்த எதிர்காலத்தை வடிவமைக்க உதவும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
“இந்தியாவின் 1.4 பில்லியன் மக்களுக்கு நன்றி, இந்தியா ஏஐ உருமாற்றத்தில் முன்னணியில் உள்ளது. மின்னிலக்க உள்கட்டமைப்பு முதல் துடிப்பான புதிய தொழில்கள், சுற்றுச்சூழல் அமைப்பு, அதிநவீன ஆய்வுவரை, ஏஐ தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள், நாட்டின் லட்சியத்தையும் பொறுப்பையும் பிரதிபலிக்கின்றன,” என்று திரு மோடி கூறினார்.
மாநாட்டுக்கு 250,000க்கும் அதிகமான பார்வையாளர்களை எதிர்பார்ப்பதால் பாதுகாப்புக் குறித்த அக்கறையும் எழுந்துள்ளது.

